Breaking News

ஒபாமாவின் கழிப்பறை கொள்கைக்கு அமெரிக்க கோர்ட் அதிரடித் தடை !!!

மாற்றுப் பாலின மாணவ - மாணவியர் தற்போதைய தங்களது பாலின அடையாளத்தின்படி கல்விக் கூடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடர்பான அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான அரசின் உத்தரவுக்கு டெக்சாஸ் மாநில கோர்ட் தடை விதித்துள்ளது.

பிறவியிலேயே ஆணாக இருந்து பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெண்ணாக மாறியவர்களும், பிறவியிலேயே பெண்ணாக இருந்து பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆணாக மாறியவர்களும் மாற்றுப் பாலினத்தவர் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

சிறைச்சாலைகள், பொதுக் கழிப்பறைகள் போன்றவற்றில் இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனியாக வசதிகள் செய்து தரப்படாத நிலை உலகம் முழுவதும் நீடித்து வருகிறது. இந்த குறைபாட்டை போக்க அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் பிறப்பின்போது இருந்த பாலியல் தகுதியை புறந்தள்ளி, சமீபத்தில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ..? அதற்கேற்ப, ஆண் என்றால் ஆண்களுக்கான கழிப்பறையையும். பெண் என்றால் பெண்களுக்கான கழிப்பறையையும் இனி அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்த புதிய சட்டம் கூறுகிறது.

இதற்கு, வடக்கு கரோலினா மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பிறவியில் ஆணாக பிறந்த ஒருவர், பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெண்ணாக மாறிவிட்டார் என்பதற்காக பெண்களுக்கான கழிப்பறைக்குள் அவரை அனுமதித்தால் பிறவியிலேயே பெண்ணாக பிறந்து, தற்போதும் பெண்ணாகவே இருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிவிடும். கழிப்பறைகளுக்கு போகும் எல்லா பெண்களும் பாதுகாப்புக்காக ரகசிய போலீசை உடன்அழைத்துச் செல்ல முடியாது என இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இதுதொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அமெரிக்க அரசின் கல்வி மற்றும் நீதித்துறை அமைச்சகங்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அனைத்து கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ - மாணவியரை பிறப்புரீதியாக இல்லாமல் தற்போதைய உடல் கூறியிலின்படி தாங்கள் விரும்பும் கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் உள்ளிட்ட 13 மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. அரசின் உத்தரவை எதிர்த்து டெக்சாஸ் மாநில அரசின் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. நாட்டின் தலைமையான வாஷிங்டன், தங்களது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக டெக்சாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் உள்ள அலாபாமா, விஸ்கான்சின், மேற்கு விர்ஜினியா, டென்னெஸி, அரிசோனா, மைனே, ஒக்லஹாமா, லுய்சியானா, உட்டா, ஜார்ஜியா, மிஸ்ஸிசிப்பி, கென்ட்டுக்கி ஆகிய மாநில அரசுகளும் இவ்வழக்கில் மனுதாரர்களாக இணைந்துள்ளன. இதுதவிர, மேலும் பத்து மாநிலங்கள் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்துள்ளன.

டெக்சாஸ் மாநிலம் தொடர்ந்த வழக்கை விசாரித்துவந்த டெக்சாஸ் வடக்கு மாவட்ட நீதிபதி ரீட் ஓ’கொன்னோர், மாற்றுப் பாலினத்தவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நாடு முழுவதும் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பு மாற்றுப் பாலினத்தவர்களுக்கு அதிர்ச்சியையும், அமெரிக்க அரசுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தடைக்கு எதிரான தடை உத்தரவை பெறும் முயற்சியில் சுப்ரீம் கோர்ட்டை நாடுவது தொடர்பாக அரசு வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.