கர்ப்பிணி தாய்மாருக்கு பயனுள்ள Aps. !
முதன் முதலாய் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த அந்த பரவச அனுபவம் எப்படி இருந்திருக்கும்? பேர் கிரில்ஸ் காடுகளில் அனுபவிக்கும் த்ரில் அனுபவங்கள் எப்படி இருக்கும்?
மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை ஏறி முடித்தபோது, எட்மண்ட் ஹிலாரியின் கால்கள் எப்படி சிலிர்த்திருக்கும்? இப்படியான பரவச அனுபவங்களை ஃபீல் செய்ய, அட்வெஞ்சர் பயணம் செய்பவர்களால் மட்டும்தான் முடியுமா? வலி, வேதனை, மகிழ்ச்சி, கனவு, ஆசை, அரவணைப்பு, பரவசம் என அனைத்தையும் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் சுமார் 10 மாதங்களுக்கு. ஆம், தனது உதிரத்திலிருந்து உயிர்த்தெழும் உயிரை அவள் சுமக்கும் அந்த 10 மாதங்கள் தரும் அனுபவங்கள், எப்பேர்ப்பட்ட அட்வெஞ்சர்களாலும் தர முடியாது.
பிரசவ காலகட்டத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள், மருத்துவப் பரிசோதனைகள், உணவுப் பழக்கங்கள் என எத்தனையோ விஷயங்கள் மிகவும் கவனமாக செய்ய வேண்டியவை. வாட்ஸ் அப்பும், ட்விட்டரும் ஆட்சி புரியும் இவ்வுலகில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுவதற்காகவும், பல ஸ்மார்ட் போன் ஆப்களை உருவாக்குகின்றனர் மென்பொருள் பொறியாளர்கள். அப்படியான ஆப்களில் சிறந்த ஆப்களைப் பற்றிய தொகுப்புதான் இது…
வெப் எம்.டி பிரெக்னன்சி (Web MD Pregnancy)
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகச்சிறந்த ஆலோசனைகளை வழங்கும் இந்த ஆப், ஆப்பிளின் i-os தளத்தில் மட்டுமே இயங்கக் கூடியது. பொதுவாக இதுபோன்ற ஆப்களின் தகவல்களில் நம்பகத்தன்மை இருக்காது. ஆனால், இந்த ஆப்பில் கிடைக்கும் அனைத்துத் தகவல்களுமே நேரடியாக தலைசிறந்த மருத்துவர்களிடம் இருந்து பெறப்படுபவை. இந்த ஆப்பின் மிகப்பெரிய சிறப்பம்சம், பிரசவ காலத்தில் பெண்களின் உடல்நிலை, குழந்தையின் வளர்ச்சி, உணவுகள், உடல்பயிற்சி என அனைத்தைப் பற்றியும் அறிவுரை வழங்கும் ‘பிரெக்னன்சி 101’ ஆப்ஷன்தான். தந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் ‘ஜஸ்ட் ஃபார் டேட்’ ஆப்ஷனும் இதன் சிறப்பம்சமாகும்.
பேபி பம்ப் பிரெக்னன்சி ப்ரோ (Baby Bump Pregnancy Pro)
பெயரில் ப்ரோ வெர்ஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் முழு வெர்சனையும் இலவசமாகவே டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் இந்த ஆப், குழந்தை பிறக்கும் வீடியோக்களை தொகுத்து வழங்குகிறது. இதனால், பிரசவ கால வலிகளுக்கு மனதளவில் பெண்களால் தயாராகிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், பிரசவ காலத்தில் ஒவ்வொருவருடைய மனநிலை, அறிகுறிகள், எண்ணங்கள் ஆகியவற்றை அப்லோடு செய்யும் வசதியும் உள்ளது.
நேச்சர் பை க்ளோ (Nurture by Glow)
கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கும் ஆப் இது. மருத்துவரைப் பார்ப்பதற்கான அப்பாயின்ட்மென்ட் நோட்ஸ் முதலியவற்றை மிகச்சிறப்பாக கையாளும். வாட்ஸ் அப்பில் குரூப்கள் இருப்பது போல் இதிலிருக்கும் ‘கம்யூனிட்டி’யின் உதவியின் மூலம் பிற கர்ப்பிணிப் பெண்களோடு தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களோடு கலந்துரையாடவும், ஆலோசனைகள் பெறவும் இந்த ஆப் பெருதவியாக இருக்கும்.
ஸ்ப்ரௌட் (Sprout)
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பேரின்பம் தருவது, தங்கள் குழந்தையின் அசைவுகளை உணர்வதுதான். குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து, அதைப் பார்க்க உதவுவதுதான் இந்த ஸ்ப்ரௌட் ஆப்பின் ஸ்பெஷாலிட்டி. குழந்தையின் வளர்ச்சி, எடை, குழந்தையின் உதை ஆகியவற்றை சரியாக கண்காணிக்கிறது இந்த ஸ்ப்ரௌட். மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சோதனைகள் முதலிய குறிப்புகளையும் இந்த ஆப் தருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் i-os தளங்களில் இந்த ஆப் இயங்கும்.
மை பேபிஸ் பீட் (My baby’s beat)
அல்ட்ரா சவுண்ட் மூலம் குழந்தை அசையும் ஓசைகளை இந்த ஆப் கேட்க உதவும். இனி மருத்துவரிடம் சென்று ஸ்டெதாஸ்கோப் உதவியோடு குழந்தையின் அசைவுகளைக் கேட்க வேண்டியதில்லை. இந்த ஆப்பைப் பயன்படுத்தும்போது நமது மொபைலே ஸ்கேனராக செயல்படுகிறது. போனை வயிற்றுப் பகுதியில் வைத்தவுடன், இந்த ஆப் குழந்தையின் அசைவு ஓசையை ரெக்கார்ட் செய்துவிடும். இப்படி செய்யும்போது போனை flight modeல் போடுவது அவசியம். குழந்தை வளர்ந்த 30வது வாரத்திற்குப் பிறகு இந்த் ஆப் துல்லியமாக ஓசையை ரெக்கார்ட் செய்யுமாம். ஆண்ட்ராய்டு வெர்ஷன் 1.99 அமெரிக்க டாலர்களிலும், ஐ-போன் வெர்ஷன் 4.99 அமெரிக்க டாலர்களிலும் கிடைக்கிறது.
<https://youtu.be/eer2FaenkXw>
பேபி நேம்ஸ் (Baby Names)
கரு உருவான முதல் நாளிலிருந்தே கணவன், மனைவி இருவரின் மனதையும் குடையும் கேள்வி, ‘குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்’ என்பதுதான். பெரியவர்களின் ஆலோசனையில் தொடங்கி, நியூமராலஜி வழியாக கூகுள் வரை சென்று தேடுவார்கள். இதோ ஆயிரக்கணக்கான பெயர்கள் இப்போது உங்கள் கைகளில். ஆண், பெண் குழந்தைகளுக்கான தனித்தனிப் பெயர்கள், அந்தப் பெயர்களுக்கான அர்த்தம், அந்தப் பெயர் ஏற்பட்டதற்கான வரலாறு என அனைத்தையும் இந்த ஆப் தொகுத்து தருகிறது. கணவன், மனைவி இருவரது பெயரையும் டைப் செய்தால் அதற்கு மேட்சான குழந்தையின் பெயரைப் பரிந்துரைக்கிறது இந்த மென்பொருள்.
ஹூ இஸ் யுவர் டேடி (Who’s your Daddy)
பிரசவக்காலம் பெண்களுக்கு மட்டுமானதா என்ன? ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் சுமக்கும் அந்த ஒரு உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒவ்வொரு ஆணும், தான் மனதில் சுமந்து கொண்டிருக்கும் இரு உயிர்களையும் காக்க வேண்டும் என்று நினைப்பான். அவர்களுக்காகத்தான் இந்த ஆப். தங்கள் மனைவியின் நலனுக்காகவும், குழந்தையின் நலனுக்காகவும் என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைத்தையும் சொல்கிறது இந்த ஆப். முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இன்றைய அறிவியல் வளர்ச்சி, அனைத்தையும் நம் கைகளுக்குள் கொண்டு வந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆப்களை உபயோகப்படுத்துவது ஓ.கே. ஆனால் அதேசமயம், மொபைலின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மொபைல் காந்த அலைகள் அந்தக் கருவின் வளர்ச்சியைக் குறைக்ககூடும்.



