Breaking News

முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ உறுதி பூணுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

நல்லாட்சியில் சகல இன மக்களும் தமது உரிமைகளைப் பெற்று நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில், முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் - புரிந்துணர்வுடனும் - தியாக சிந்தனையுடனும் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.   

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். 
நல்லாட்சி  சகல இன மக்களும் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. விசேடமாக தமிழ், முஸ்லிம்மக்கள் தமது உரிமைகளை அரசியல் ரீதியாக பெற்றுக் கொள்வதற்கான அரசியல் சூழல் தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. 

முஸ்லிம்கள் ஒற்றுமையாக – புரிந்துணர்வுடன் - தியாக சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதி பூணுவோம். எம்மிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலே எமக்கு எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்;க்கம். அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மீண்டும் சிங்கள தேசிய வாதம் தலைதூக்க முயற்சி செய்கின்றது. இந்நிலையில், உழ்ஹிய்யா கடமையினை நிறைவேற்றும் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உழ்ஹிய்யா பிராணியின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். – என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.