Breaking News

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா ?

உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு எது என்ற ஆய்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் டென்மார்க் முதலிடமும்,ஸ்விட்சர்லாந்து 2ம் இடமும்,ஐஸ்லாந்து 3ம் இடமும்,நார்வே 4ம் இடமும்,ஃபின்லாந்து 5ம் இடமும் பிடித்துள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்த நாடுகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று அருகருகே உள்ள நாடுகள்.

சந்தோஷம் என்பது எப்படி கணக்கிடப்படுகிறது. முக்கியமாக பணம் சந்தோஷத்திற்கு அடிப்படை அல்ல. அதனால் பணம் கணக்கெடுப்பில் இல்லை.
பாதுகாப்பு, சமூகத்தில் ஏற்றத்தாழ்வற்ற நிலை,சமூக உறவு, சுதந்திரமாக வாழ்தல்,லஞ்ச லாவண்யமற்ற சமூகம், நேர்மைத்தன்மை,தன்நிறைவுபெறும் உள்ளூர் உற்பத்திகள்,மக்களின் நோக்கங்களை நிறைவேற்றும் அரசு என சந்தோஷமான வாழ்க்கைக்கு காரணிகளாக உள்ளன.

இந்த அடிப்படையில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள மக்கள் பணத்துக்காக மட்டும் வாழ்வதில்லை. பணம் ஒரு பொருளாதார கருவி. அவ்வளவே. அதையும் முறி நண்பர்கள்,உறவினர்களுடன் இணக்கமாக வாழ்வது, தீவிரவாதமில்லாத மனநிலை, அன்பு செலுத்துதல், பிறரை மதித்தல், அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை,பிறருக்கு உதவுதல்,வாரத்தில் ஒரு முறையேனும் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியடைதல் என பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

குறிப்பாக மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அவர்கள் குறைந்த நேரமே உழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை குறியீடு போல ‘ஹைக்’ என்ற டென்மார்க் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நாம் ஜாலி என்று சொல்வது போல.. ‘ஹைக்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை தெளிவுபடுத்துவது சிரமம் என்றாலும்கூட இப்படி சொல்லலாம். அதாவது சின்ன சின்ன சந்தோஷங்களை கூட உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பது என்று அறியப்படலாம். இது தான் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படை தத்துவம்.