Breaking News

குண்டு குழந்தைகளின் உடல் எடையை குறைக்க வேணுமா?

குழந்தைகளுக்கு பார்ப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், பின் அவர்களின் உடல் எடையானது அளவுக்கு அதிகமாகி, அதிகம் சிரமப்படுவார்கள்.

ஏனெனில் தற்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக எடையைக் கொண்டு, அவர்களால் சரியாக நடக்க முடியாத நிலையில் உள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான உணவு முறையை பின்பற்றாமல், போதிய உடற்பயிற்சி செய்ய வைக்காமல் இருப்பதால், குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் கரையாமல், உடலிலேயே தங்கி, குண்டூஸாக்குகின்றன.

எனவே குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவை, சரியான நேரத்தில் கொடுத்து, அவர்களது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வையுங்கள். சரி, இப்போது குண்டாக இருக்கும் குழந்தைக்கு எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்ள வேண்டுமென்று பார்க்கலாம்..

* காலை உணவு மிகவும் முக்கியமானது. அதிலும் குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு காலை வேளையில், ஒரு பௌல் ஓட்ஸை, பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். மேலும் பழங்களில் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் கொடுக்கலாம்.

* கார்போனேட்டட் பானங்களான கோகோ கோலா, மிரிண்டா, ஃபேண்டா போன்றவற்றை கொடுப்பதற்கு பதிலாக, ஆரஞ்சு, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்றவற்றால் செய்த ஜூஸ் கொடுக்க வேண்டும். அதிலும் இதனை தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும், உடல் எடையும் குறையும்.

* பொதுவாக குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றால் பிடிக்காது. ஆனால் அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க, காய்கறிகளை வைத்து, சூப், சாலட் என்று செய்து கொடுக்கலாம். அதுவும் ப்ராக்கோலி, கேரட், பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை மிகவும் சிறந்தது, எனவே இத்தகைய காய்கறிகளை வைத்து, மதிய வேளையில் சமைத்து கொடுத்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

* குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாண்ட்விச் செய்து கொடுக்கலாம். அதுவும் இரண்டு பிரட் துண்டுகளிலும் கொழுப்பு குறைவாக உள்ள சீஸ் தடவி, பின் அதன் நடுவே வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் வெங்காயம் வைத்து கொடுப்பது நல்லது. வேண்டுமெனில் காய்கறிகளுக்கு பதிலாக பழங்களை வைத்தும் சாண்ட்விச் செய்து கொடுக்கலாம்.

* இரவில் 2 சப்பாத்தி, ஒரு பௌல் சாலட் அல்லது முளைக்கட்டிய பயிர்கள் கொடுத்தால், உடல் நன்கு ஆரோக்கியத்துடனும், உடல் எடையும் குறையும்.

* குழந்தைகளை தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை செய்ய வைக்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் விருப்பமான விளையாட்டுக்களில் அல்லது நடன வகுப்புக்கள், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட ஊக்கப்படுத்தினால், குழந்தைகளின் திறமை அதிகரிப்பதோடு, அவர்களது உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அவர்களை நன்கு ஓடியாடி விளையாட வைக்க வேண்டும்.