Breaking News

உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கத்தை இப்படி அமைக்கலாமே!

சாப்பிட்டுட்டு  விளையாடப் போ... சாப்பிட்டுட்டு டிவி பாரு... சாப்பிட்டு ஹோம் வொர்க் பண்ணு என ஒவ்வொரு வேளையின்போது குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது பெற்றோர்களுக்கு. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படுத்தி தர வேண்டியது பெற்றோரின் கடமை.  சிறுவயதிலிருந்தே அவர்களுக்குக் கொடுக்கும் உணவுகளைச் சரியான நேரத்தில், சரியான அளவில், தேவையானவற்றைக் கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக்கொக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் ஊட்டப்படும் கீரைகள், மசித்த பருப்பு போன்ற உணவு தொடங்கி, ஒவ்வொன்றாக அம்மா பார்த்துப் பார்த்து ஊட்டுவார். மருத்துவரின் ஆலோசனைக்கும் மேலாக, பாட்டியின் அனுபவம் நிறைந்த உணவுகளின் சத்துக்கள், தலைமுறைத் தாண்டியும் நிற்கும்.

எந்தக் காய்கறி, பழங்களில், பயறு வகைகளில் என்னச் சத்துக்கள் இருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். குழந்தைகள் வளர்ந்த பின், அவர்கள் விரும்பும் எல்லா உணவுகளையுமே சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால் அதில் இருக்கும் ஜங்க் புட் வகைகளை ஒவ்வொன்றாக நீக்குங்கள். 

குழந்தைகளுக்கு அம்மா உணவூட்டும்போது, காக்கா கதை, நரி கதைகளைச்  சொல்லி ஊட்டுவார்கள். அதே நேரம், குழந்தையை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, பயமுறுத்தும் கதைகளைச் சொல்லக் கூடாது. கொஞ்சம் வளர்ந்ததும், போரடிக்காத மற்றும் மகிழ்ச்சியூட்டும் கதைகளைச் சொல்லி சாப்பிடவைக்க வேண்டும்.

எப்போதும் சரியான நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிகளில் சத்து இல்லை என்பதால், சாலட்டுகள், பயறு வகைகளை அவர்கள் விரும்பும் வண்ணம் செய்து கொடுக்கலாம்.

அதிகமான வெரைட்டி உணவுகளைக் கொடுக்காமல், உண்ணும் நேரத்தில் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும்போது, நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.

கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகள் கெடுதலானவை. பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில், அவை கெட்டுவிடாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்காக சில கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. அவை உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். இதுபோல, இனிப்பு வகைகள் மற்றும் வறுவல் மீன், இறைச்சி உணவுகளில் கண்ணைக்கவரும் கலர்கள் சேர்க்கப்படுகின்றன. அவையும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவையே.

ஜூஸ் குடிக்க வேண்டுமானால், வீட்டில் தயாரித்துக்கொடுங்கள். அதைவிட, பழங்களைக் கடித்தோ அல்லது துண்டுகளாக்கியோ தின்பதுதான் நல்லது. கடைகளில் விற்கப்படும் மாவுப் பண்டங்கள் மற்றும் பேக்கரியில் தயாரிக்கப்படும் மைதாவினால் செய்யப்படும் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

சாப்பிடும் நேரம் ஒவ்வொரு நாளும் மாறக் கூடாது. அதோடு, குடும்ப நபர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்தே உண்ண வேண்டும்.