Breaking News

கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை !!

நேற்றைய தினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிழக்கு மாகாணத்தில் உள்ள கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு  கோரிக்கை விடுத்தார்

அதற்கு தமது  முழுமையான ஒத்துழைப்பை  வழங்குவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தில் கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆயிரத்து 134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

எனவே இந்த ஆசிரியர் வெற்றிடங்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கல்வியியற் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இதனடிப்படையில் விரைவில் இவர்களுக்கான நேர்மூகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு  ஆகிய மாவட்டங்களில் நிலவும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார்

இந்நிலையில் தமது ஆட்சிகாலத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்பாமல் போகப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் ஐயாயிரத்து 21 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த வாரம் திருகோணமலையில் நடந்த நிகழ்வொன்றில் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்

இதன் போது மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை மாத்திரமின்றி தளபாடக் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக ஜனாதிபதி முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.

எனவே தமது ஆட்சிகாலப்பகுதிக்குள் திருகோணமலை,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட பாடசாலைகளிலுள்ள  தளபாட பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்வதாக முதலமைச்சர் கூறினார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறினாலேயே கிழக்கில் இத்தனை ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே தமது ஆட்சிக்காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதே தமது முதன்மை நோக்கம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்