Breaking News

புதிய காத்தான்குடி விடுதி வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வும், கடற்கரை வீதி புனரமைப்பு வேலைத் திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தார்இட்டு செப்பனிடப்பட்ட புதிய காத்தான்குடி விடுதி வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வும் மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின்  ஒரு கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு என்பன 02-10-2016 நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகளில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய காத்தான்குடி விடுதி வீதி மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன்,காத்தான்குடி கடற்கரை வீதி புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்லையும் உத்தியோகபூர்வமாக நட்டி வைத்தார்.


காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளுக்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாயல் தலைவருமான கே.எல்.எம்.பரீட், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மத்தியகுழு பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்த விஷேட வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசேடமாக, காத்தான்குடி நகரில் பல வீதிகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன.


அந்தவகையில், 3.5 மில்லியன் ரூபா செலவில் புதிய காத்தான்குடி விடுதி வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதியை அழகுபடுத்தல், நடைபாதை நிர்மாணம், பொருத்துக்கள் இடல் மற்றும் வீதி இருக்கைகள் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களுக்காக அடிக்கல்லும் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 (பழுலுல்லாஹ் பர்ஹான்)