Breaking News

இருமல், சளிக்கு நிரந்தரமாக குமணாக்கவல்லது கற்பூரவல்லி

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

கற்பூரவல்லி (Coleus aromaticus)  அல்லது ஓமவல்லி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.