Breaking News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கணவருடன் சென்று வாக்களித்தார் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு லீப் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து இன்று அங்கு தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் அடுத்தடுத்து ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.ஆனாலும் ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள். அங்கு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உள்ளது. அதன்படி 4 கோடி பேர் ஏற்கனவே வாக்களித்தவர்களை தவிர. மற்றவர்கள் இன்று வாக்களின்றனர். 

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தனது கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டனுடன் நியூயார்க்கின் சப்பாக்குவா அரசுப் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்களித்தார். 

வாக்களித்த பின் ஹிலாரி கூறுகையில் "இது மிகவும் பெருமையான ஒரு தருணம். ஏராளமான மக்கள் நான் பதவிக்கு வரவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு நான் நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன்" என்றார்.

யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள் நடத்திய கடைசிகட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு 46.2 சதவீதமும், டொனால்டு டிரம்புக்கு 43.7 சதவீதமும் ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.