Breaking News

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே...

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குஅய்டாமெட்டி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது

இன்று முற்பகல் 10.30 அளவில் திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அரசியல் பொருளாதார மற்றும் முதலீடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

நிதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சில நிர்மாண செயற்பாடுகளில் மத்தியரசின் தலையீடுகள் தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் சுவிஸர்லாந்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் பாரிய கைத்தொழில் முதலீடுகளை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவது தொடர்பிலும் இதன் போது சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளர் டமியானோ அஞ்சலோ குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்

இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,நாட்டில் தற்போது திடீரென தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளி்ன் பின்னால்  திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய  அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான சாதகமான காரணிகள் உருவாகியுள்ளன
இந்நிலையில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான உபகுழு அறிக்ைக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது,

அதற்கு எதிராக பெரும்பான்மை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தவும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை உருவாக்கும் போது சில வேளை   பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் பெரும்பான்மையினரின் வாக்கே அதனை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்

ஆக சிறுபான்மையினர் தொடர்பான் தவறான புரிதலை பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இனவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த இனவாத செயற்பாடுகள் தீடீரென  வௌிக் கிளம்பியுள்ளன

ஆனால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிறுபான்மை மக்களுக்கான வடக்கும் கிழக்கும் மாத்திரம் நன்மை பெறப்போவதில்லை பெரும்பான்மையினர் வசிக்கும் ஏனைய ஏழு மாகாணங்களும் இதன் மூலம் பாரிய நன்மையை பெறப் போகின்றன.

ஆகவே  மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையினர் இன்று  தமது எல்லாத் தேவைகளுக்கும் கொழும்புக்கு அலைய வேண்டிய தேவையில்லை தமது பெரும்பாலான தேவைகளை தமது சொந்த மாகாணங்களிலேயே நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சாதகமான சூழல் உருவாகும் என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையினர் இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காமல் தௌிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்