Breaking News

சமூகம் அல்லது மக்கள் இல்லை என்றால் பொலிஸ் சேவையானது இல்லை – மட்டு -மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க

சமூகம் அல்லது மக்கள் இல்லை என்றால் பொலிஸ் சேவையானது இல்லை என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஏ.டி.கே.கருணாநாயக்க தெரவித்தார்.

பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் காவலரனை ஆரையம்பதி ராஜதுரை கிராமத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.....

இன்றைய  தினமானது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் ஒரு விஷேட தினமாகும் அது என்னவென்றால் தேசிய சமூக சேவை பொலிஸ் தினமாக பொலிஸ்மா அதிபரினால் இன்றைய தினம் பெயரிடப்பட்டு இருக்கின்றது.

இன,மத பேதமின்றி அனைத்து மக்களுக்கு ஒரு சமமான சேவையை செய்வதன் நோக்கமாகத்தான் பொலிஸ் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து மக்களும் வாழுகின்ற பிரதேசத்தில் நடமாடும் பொலிஸ் காவலரனை உருவாக்கிக் கொண்டு இவ்வாறான சேவைகளை செய்யும் நோக்கமாகத்தான் பொலிஸ் திணைக்களத்தினால் இந்த நடமாடும் பொலிஸ் காவலரன் நிறுவப்பட்டுள்ளது. 

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு  பிரதான பொலிஸ் தின நிகழ்வு நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. 

அதே போன்றுதான் 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஒரு பொலிஸ் நிலையப் பிரிவில் ஒரு கிராமத்தை தெரிவு செய்து அந்த கிராமத்தில் நடமாடும் பொலிஸ் காவலரனை நடத்தி கொண்டு மக்களுக்கான சேவையை முற்று முழுதாக வழங்குவதற்கு பொலிஸ் திணைக்களம் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றது. 

அதவாது கிராமத்தில் ஏற்படுகின்ற பொது சேவைகளான சுகாதாரம்,கல்வி,கலாசார,ஆத்மீக,விளையாட்டு, போக்குவரத்து, சிரமதானம் போன்ற அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு பொலிஸ் திணைக்களமானது மற்றைய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாறான வேலைகளை செய்வது இந்த நடமாடும் பொலிஸ் காவலரனின் நோக்கமாகும்.

உண்மையிலே சமூகம் அல்லது மக்கள் இல்லை என்றால் பொலிஸ் சேவையானது இல்லை ஆகவே இந்த சமூக சேவையானது, பொலிஸ் சேவையானது சமூகத்திற்குள் கொண்டு செல்ல வேண்டுமாயின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த சமூக சேவையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் எண்ணக்கருவுக்கமைய உண்மையாகவே சமூக பொலிஸ் சேவையானது சமூகத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அது அதிகம் உயர்த்தப்பட வேண்டும் அதன் சேவையானது மக்களுக்குள் செல்ல வேண்டும் அதற்கான எண்ணக்கருவை அந்த கிராமத்திலுள்ள மக்களிடத்தில் இருந்தும் பெற்று மக்களுக்கான உதவிகளையும், சேவைகளையும் செவ்வனே முடித்து கொடுப்பதுதான் அந்த சமூகசேவை பொலிஸின் நோக்கமாக கருதப்படுகின்றது. 

உண்மையாகவே காத்தான்குடி பொலிஸ் பிரிவை பார்க்குமிடத்து  உடல் ரீதயான குற்றங்களை பார்க்கும் பொழுது நூற்றுக்கு நூறு வீதமான குற்றங்கள் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளாகவே இருப்பதுடன் காணி மற்றும் பொருட்கள் சம்மந்தமான பிரச்சினைகளில் 3 பிரச்சினைகள் மட்டும்தான் தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
அறிக்கைகளின் படி இதை சத வீதத்தில் பார்க்கும் பொழுது நூற்றுக்கு தொண்ணூறு வீதம் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றது.

சமூகத்தில் வாழுகின்ற மக்களுடைய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கப்பெற்றால் உண்மையாகவே உங்களுடைய பிரதேசத்தை எந்த குற்றமற்ற பிரதேசமாகவும் ஆக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.

ஆகவே மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாக இருக்கின்றது.உங்களுடைய ஒத்துழைப்பை கொண்டுதான் இவ்வாறான வேலைகளை செய்ய முடியும்.

காத்தான்குடி பிரதேசமானது ஒரு குற்றமற்ற பிரதேசமாகத்தான் காட்சியளிக்கின்றது.

அதற்காக இந்த சமூகத்தில் வாழுகின்ற கிராமத்தில் வாழுகின்ற பல்வேறு தரப்பினர்களுக்கிடையிலே இருக்கின்ற நிலமைகளை கொண்டு உங்களுடைய ஒத்துழைப்புகளையும்,உங்களது நடவடிக்கைகளையும் சரியான முறையில் செய்து கொண்டு போனால் உங்களது பிரதேசத்தை குற்றமற்ற பிரதேசமாக கருதமுடியும்.

மற்றைய அரச நிறுவனங்களை பார்க்குமிடத்தும் அவைகளை ஒப்பிட்டு பாக்குமிடத்தும் உண்மையாகவே பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையமானது அதன் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை பொலிஸ் சேவையானது எந்த பிரிதிலாபங்களும் இல்லாமல் நாட்டில் சட்டத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நாட்டத்தான் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஏ.டி.கே.கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)