Breaking News

(ஐ எஸ். ஐ எஸ்.)ஸூக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றி கூறுகின்றேன்

சர்வதேச பயங்கரவாத அமைப்பான (ஐ எஸ். ஐ எஸ்.)ஸூக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி ஒருங்கிணைப்பாளர் வி.ரி.எம். முபாறக் ஜேபி தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது......

இன்று இந்நாட்டில் நல்லாட்சி அரசு அதிகாரத்தில் இருக்கின்ற போது முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாத அமைப்புக்களான பொதுபலசேன, சிங்கலே, இராவணபலே போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், வந்தேறுகுடிகள் எனவும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் முன்னெடுக்கும் இக்காலத்தில் நல்லாட்சி அரசாக்கத்தின் பொறுப்பு வாய்ந்த நீதி அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இலங்கை முஸ்லிம்களில் 32 பேர் ஐ எஸ். ஐ எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்றும், சில மத்ரஸாக்களை சுட்டிக்காட்டி மத்ரஸாக்களில் இனவாத சிந்தனைகள் போதிகப்படுவதாக கூறியிருந்தமை இலங்கை வாழ் முஸ்லிம்களை மிக வேதனைப்படுத்திய உரையாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நான் உட்பட முஸ்லிம்கள் 100 வீதம் வாக்களித்து உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான பேச்சுக்களும் இனவாத சிந்தனைகளை தூண்டும் அமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தாமதமாவதைக் கண்டு முஸ்லிம் சமூகம் மிக அதிர்ப்தி அடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த நேரத்தில் பெரும்பான்மை மக்களின் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஊடகங்கள் மூலம் நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றேன் இலங்கை முஸ்லிம்களுக்கும், சல்வதோச தீவிரவாத அமைப்பான ஐ எஸ். ஐ எஸ். அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியிருந்தார். 

இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருந்தது முஸ்லிம் மக்களிடையே மிக உட்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நான் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்றைய எமது சமூகத்தின் தேவை கருதி பொதுவான அழைப்பொன்றை விடுத்துள்ளார். 

அவ்வழைப்பானது கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபடுவோம் என்பதாகும். இன்று எமது சமூகம் இருக்கும் நிலைமையில் மிகவும் வரவேற்கக்கூடிய இக்கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து கட்சி பேதம் கலர்களை மறந்து ஒருவர் மற்வரை வசைபாடுவதை விடுத்து தலைவர் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் எமது முஸ்லிம் சமூகம் அந்த முஸ்லிம் சமூகத்துக்காக அந்த பதவியினை துறந்தாவது ஒன்றுபடுமாறும் எமது முஸ்லிம் சமூகத்தின் எமது மக்களின் கண்ணீர் துடைக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)