Breaking News

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி பணிப் பகிஷ்கரிப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மங்களராமய மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் நடவடிக்கையினை எதிர்த்து பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள்  பிரதேச செயலக முன்பாக உள்ள வீதியோரத்தில் கறுப்பு பட்டி அணிந்து ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட  எல்லைகிராமமான பட்டிப்பளை பிரதேசத்தின் கச்சைக்கொடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத சிங்கள குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கும் நவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி அதிகாரிகளுக்கு தேரரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை கண்டித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிராம சேவை உத்தியோகத்தரின் தேசிய உடை நிர்வாணமா?, காவியுடையே நீ மதகுருவா மடக்குருவா?, தரம் கெட்டு பேசும் நீ பிக்குவா? மக்குவா?, மதம் பிடித்த காவிக்கு சட்ட நடவடிக்கை உண்டா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதைகளை ஏந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.