Breaking News

சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சமூக மட்ட குழுக்களை அமைப்பதற்கான விசேட கலந்துரையாடல்

(லியோன்)

சமூக மட்ட விழிப்புணர்வு குழுவினை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 08.12.2016 வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் , சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உடனடி சட்ட  நடவடிக்கைகளை எடுப்பதற்காக சமூக  நலன் விரும்பிகளால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கவனத்திற்கு கொண்டு  செல்லப்பட்டதற்கு அமைவாக   
 இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக  சமூக மட்ட விழிப்புணர்வு குழுக்களை அமைப்பதற்கான  விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் 08.12.2016 வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இதன் போது சமூக  நலன் விரும்பிகளால் முறைப்பாடுகளை நேரடியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன்  இது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது .   

இதற்கு அமைய  மட்டக்களப்பில் இயங்குகின்ற சமுதாய சீர்திருத்த பிரிவு சிறுவர் நன்னடத்தை பிரிவு , சட்ட உதவி ஆணைக்குழு , சூர்யா பெண்கள் அமைப்பு , மனித உரிமைகள் ஆணைக்குழு , மத்தியஸ்த சபை தவிசாளர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்தி சங்கம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் , பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்கள் , விமோச்சனா இல்லம் , லயன்ஸ் கழகம் ,யுனிசெப் ஆகிய சமூக நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் . நிலைய பொறுப்பதிகாரிகள்  முன்னிலையில் சமூக மட்ட விழிப்புணர்வு குழு  உறுப்பினர்கள் தெரிவு  செய்யப்பட்டனர் .

நடைபெற்ற  சமூக மட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள்  நியமித்தல் நிகழ்வின் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  தெரிவிக்கையில் நீதி துறையுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள மற்றும் தொடர்பினை பேணல், எவ்வாறான வழிகளில் தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது , சகல தரப்பினர்களிடமும்  , சமூகங்களிடமும்  பெறப்படுகின்ற  விடயங்கள் , குற்றம் இளைக்கப்படுகின்றவர்களுக்கான  தண்டனை எவ்வாறு அமைய வேண்டும்  போன்ற  விடயங்களும் ஆலோசனைகளும்  தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது