Breaking News

மட்டு-மாவட்டத்தில் இவ்வாண்டில் வீதி விபத்துக்களினால் 59 பேர் மரணித்துள்ளனர் ; விபத்துக்களை குறைக்க விஷேட செயற்திட்டம் !!! -படங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவிலும் 2016-ஜனவரி மாதம் தொடக்கம் 2016 டிசம்பர் மாதம் இன்று வரை பாரிய வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 எனவும் பாரிய காயங்கள் மற்றும் அங்கவீனம் ஏற்படுத்திய வீதி விபத்துக்கள் 300ற்கும் அதிகம் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஜே.பி.கே.ஜெயவீர தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் -இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 28-12-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவும் ,மட்டக்களப்பு சர்வோதயமும்,ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட வாகன விபத்துக்களை குறைக்கும் செயற்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள காத்தான்குடி பஸ் தரிப்பு நிலைய நுழைவாயிலில் நிறுவப்பட்ட வீதி விபத்து தொடர்பிலான விழிப்புணர்வு பலகையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேற்படி வீதி விபத்து தொடர்பிலான விழிப்புணர்வு பலகையை காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரீ.ஜெயசீலன் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இங்கு திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு பலகையில்    அதி வேகத்துடன் வாகனம் செலுத்தி வாழ்நாள் அனைத்தும் வேதனையை அனுபவிப்பது ஏன்?,நீங்களும் இதற்கு அகப்படுவீர்களா? காத்தான்குடி பொலிஸ் நிலையம் -0652246595 மாவட்ட பொலிஸ் இலக்கம் 0652222664., 0652224404 எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி விபத்தினால் ஏற்படும் விபரீதங்கள்,பாதிப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் காத்தான்குடி பிரதான வீதியால் சென்ற பஸ்,வேன்,லொறி,மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன நிறுத்தப்பட்டு வீதி விபத்து தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் அதில் ஒட்டப்பட்டதுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு வீதி விபத்து தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் ஒட்டுவதற்காக அதன் தலைவர் என்.எம்.அபூ பஸால் செயலாளர் எம்.எம்.சியாம் ஆகியாரிடம் ஒரு தொகை ஸ்டிகர்கள் கையளிக்கப்பட்டது.

குறித்த வீதி விபத்து தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்டிகரில் நான் நற்பண்புள்ளதொரு சாரதியாவேன், எனது நற்பண்புடனான வாகனச் செலுத்துகை மூலம் எனதும்,பிறரினதும் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாக்கப்படுகின்றன,நான் எப்போதும் பாதுகாப்பான முறையில் வாகனம் செலுத்துகின்றேன்,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவின் பொது மக்களுக்கான உதவி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)