Breaking News

ஒவ்வொரு பொதுமகனையும் தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் .

(லியோன்)

இங்கு வருகின்ற ஒவ்வொரு பொதுமகனையும்  தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி அவர்களுடைய சேவையை மிக விரைவாக சரியான நேரத்திலே பெற்றுக்கொடுக்க வேண்டும் என புதிய ஆண்டின் சத்தியப்பிரமாணம் நிகழ்வில் பிரதேச  செயலாளர் வி .தவராஜா உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தார் .


நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும்  புதிய ஆண்டின்  ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற புதிய ஆண்டின்  முதல் நாளில் அரச  சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்  நிகழ்வு அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் 02.01.2017  நாடளாவியல் ரீதியில் இடம்பெறுகின்றது .

இதற்கு அமைய அரச உத்தியோகத்தர்களின் மனோநிலையின் மாற்றத்தின்  அவசியத்தினை தெளிவு படுத்தும்   2017 ஆம் ஆண்டுக்கான  சத்தியப் பிரமாணம் நிகழ்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச  செயலகத்தில் (02) திங்கள்கிழமை  நடைபெற்றது

மண்முனை வடக்கு பிரதேச  செயலாளர் வி .தவராஜா    தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில்  தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து அலுவலக உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழிகளை பிரதேச  செயலாளர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர் .

இதன்போது இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் 2016 ஆம் ஆண்டிலே அர்பணித்து மக்களுடைய சேவையை பெற்றுக்கொள்வதற்காக கடமையாற்றியது போல் புதிய ஆண்டிலே அர்பணிப்புடன் எங்கள் மக்களுடைய தேவைகளை நாடிவருகின்ற பொழுது அன்புடனும் ,அர்பணிப்புடனும் , நல்ல மனதுடனும் அவர்களுக்கான சேவையை வழங்க வேண்டும்.
இன்று  உறுதி எடுத்துகொண்டது போல தொடர்ந்தும் இந்த ஆண்டில் கடமை புரிவீர்கள் என எதிர்பார்கின்றேன் .

ஒவ்வொரு அரச ஊழியர்களும் பொதுமக்களுடைய வரி பணத்தில் இருந்தே சம்பளத்தை பெற்றுக்கொள்கிறீர்கள் .

ஆகவே பொதுமக்களிடம் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்கின்ற நாங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்திலே தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டியதும் அவர்களின் சேவையை நிறைவேற்றுவதும்  எமது கடமையும் பொறுப்புமாகும் என உணர்ந்துகொள்ள வேண்டும் . 

இவைகள் கடந்த கால செயல்பாட்டில் உணர்த்தப்பட்டுள்ளது . ஆகவே இந்த ஆண்டிலும் இங்கு வருகின்ற ஒவ்வொரு பொதுமகனையும்  தாயாக ,தந்தையாக ,சகோதரர்களாக ,நண்பர்களாக கருதி அவர்களுடைய சேவையை மிக விரைவாக சரியான நேரத்திலே பெற்றுக்கொடுக்க  வேண்டும் .

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே ஒரு திடசந்தர்ப்பத்தை போட்டுக்கொள்ளுங்கள் .

எதிரியையும் நண்பனாக நேசித்தால் அலுவலகம் இந்த சமுதாயம் ஒரு அன்பு நிறைந்த சமுதாயமாக இருக்கும் .

எவரையும் வஞ்சிக்காதீர்கள் ,எவருக்கும் கொடுமை செய்யாதீர்கள் , நல்லதையே சிந்தியுங்கள் நிச்சியமாக உங்களுக்கு நல்லதையே செய்துகொடுக்கும்  என உறுதியாக  இன்றைய நாளில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கூறி தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து அலுவலக  உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்