Breaking News

மட்டு-அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் விஷேட நிகழ்வு மட்டக்களப்பில்- அனோமா பொன்சேக்கா பங்கேற்பு-படங்கள் !!

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகாரசபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தின்போது உயிரிழந்த,அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

ரணவிரு அதிகாரசபையின் மூலம் இந்த உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் (26) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

ரணவிரு அதிகாரசபையின் தலைவர் திருமதி அனோமா பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டூக் ஹெட்டியாராட்சி உட்பட ரணவிரு அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் இராணுவ ,பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது 500மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன் தொழிற்பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா பொன்சேகா,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.யுத்தத்திற்கு முன்னர் அதனை செய்யமுடியாத நிலையிருந்தது.இன்று அதனை செய்யமுடிந்தது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படைத்தரப்பினரின் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் இந்த அதிகாரசபையை இங்கு ஸ்தாபித்துள்ளோம்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ்  கிழக்குமாகானத்திலும்  நடைமுறைப்படுத்தப்படும்.

கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரணவிரு அதிகாரசபையின் ஊடாக மேற்கொண்டுவருகின்றோம்.


பாதுகாப்பு தரப்பினரின் குடும்பத்திற்குள்ள காணி பிரச்சினைகள் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் நான் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கை  எடுப்பதாகவும் இதன்போது தெரிவித்தார் .
(லியோன்)