Breaking News

பாலியல் அத்துமீறல் ; டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு !!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஓரினச் சேர்க்கைப் பிரியர் என அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார்.

டொனால்ட் டிரம்ப் ஒரு சரியான பெண்பித்தர் என ஹிலாரி குற்றம்சாட்டி வந்தார். இவை ஊடகங்களுக்கு பெருந்தீனியாக அமைந்தன. குறிப்பாக, டிரம்ப் மீது கடந்த ஆண்டில் பத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அவர் மீது பாலியல் குற்றம்சாட்டியவர்களில் ஒருவரான சம்மர் ஸெர்வோஸ் என்பவர், வேலை கேட்டு சென்ற தன்னை டிரம்ப் பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டதாகவும், மார்பகங்களை பிடித்து, கட்டிலில் தள்ளி கற்பழிக்க முயன்றதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்த டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பெண்ணை தகாத முறையில் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் கருத்தால் தனது கவுரவமும், நன்மதிப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சம்மர் ஸெர்வோஸ், டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு டிரம்ப் வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என நேற்று அவர் தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த வழக்கு தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.