Breaking News

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்

புனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின்  ஏற்பாட்டில் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது தொழில்களை இழந்த சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் பொருட்களின் விற்பனையும் , யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு (26) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்  நடைபெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது .இதில்  கடந்த கால யுத்தம் காரணமாகப்பாதிக்கப்பட்டு உயிரிழந்த 30 பேருக்கும் , சொத்து இழப்பினை எதிர் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் 35, பேருக்கும் ,பாதிக்கப்பட்ட 10 வணக்கத் தலங்களுக்கும்   30 பொதுச் சொத்து அழிவுகளுக்குமாக  105 பேருக்கு  75 லட்சத்து 43ஆயிரத்து 603 ரூபாக்கான நட்ட  ஈட்டுக் காசோலைகள்  வழங்கப்பட்டன .

இதவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் சுயதொழில் பயிற்சிகள்,  வீடுகள் அமைத்தல்,  கைத்தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக 521 பேருக்கு 7 கோடியே 4 லட்சத்து 82 ஆயிரம் ரூபா காசோலைகள் வழங்கப்பட்டது .

இதனை தொடர்ந்து சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்  நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது .

இந்த விற்பனையும் கண்காட்சியும்  (26)  ஞாயிறு மற்றும் (27) திங்கட்கிழமை இரண்டு நாட்களாக  காலை 9.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையில் நடைபெறும்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில்,   பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  , பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.வியாளேந்திரன்,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க,   புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்து  கலந்துகொண்டனர் .

இடம்பெறுகின்ற  இந்த திட்டத்தின் ஊடாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் வகையிலும் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் புனர்வாழ்வு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .


இந்த கண்காட்சியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின்  மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் பொருட்களின்  விற்பனையும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது (லியோன்)