Breaking News

சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்தை கண்பிடித்துள்ள மட்டு-புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இம்ஹாத் முனாப்-படங்கள்.

இன்று இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் பரவலாக காணப்படும் ஓர் இடையூறுதான் கழிவு முகாமைத்துவமாகும்.

நமது நாடு முழுவதும்  கழிவு முகாமைத்துவம் ஓர் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தினமும் பல தொன் அளவான கழிவுகள் சேர்கின்றன.

அதேபோல் நமது நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் ஓர் குறைபாடாக மின்சாரப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் ஓர் தீர்வாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த மாணவன் இம்ஹாத் முனாபின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டியில் தனது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் கலந்து கொண்ட மாணவன் இம்ஹாத் கழிவு முகாமைத்துவம்,மின்சாரப் பற்றாக்குறை என்ற இரண்டு பாரிய பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளியாக தனது விஞ்ஞான கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார்.

இந் நிலையில் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தை பெற்ற இம் மாணவனுக்கு அண்மையில் கொழும்பு மொறட்டுவை சுபோதி கல்வி நிலையத்தில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது அன்றாட சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்திற்கான சான்றிதழ் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் ஏ.டீ. சுசில் பிரேமஜயந்தவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு இன்டெல் நிறுவனத்தினால் அமெரிக்காவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டிக்கு இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் பங்குபற்றியுள்ள மாணவன் இம்ஹாத் முனாப் தனது பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ளார்.

கிழக்குப் பல்கலைகழகத்தின் இரசாயன பிரிவின் தலைவரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மஹேஸ்வரன் சிதம்பரேசன் இம் மாணவனை கண்காணிப்பாளராக வழிநடாத்தியுள்ளார்.

தனது விஞ்ஞான கண்டுபிடிப்பு பற்றி இளம் விஞ்ஞானி இம்ஹாத் முனாப் கூறியதாவது..............

இன்று உலகையே வாட்டி எடுக்கும் பிரச்சினைகளாக கழிவு முகாமைத்துவமும்,மின்சார் பற்றாக்குறையும் காணப்படுகின்றன.

முக்கியமாக நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மாபெரும் தடையாக காணப்படுகின்றது.
எனது கண்டுபிடிப்பு ஓர் மிகப்பெரிய முற்றுப்புள்ளியை இப் பிரச்சினைகளுக்கு தீர்வாக வைக்கும் என நம்புகின்றேன்.

சமூகத்தில் தினமும் சேரும் அழுகக்கூடிய சேதனக்  கழிவுகளை சேர்த்து உதாரணமாக மரக்கரி கழிவுகள்,விலங்குகளின் கழிவுகள்,சமையலறை கழிவுகள் என்பவற்;றை காற்றின்றிய சுவாசத்தின் மூலம் உக்கவைத்து அங்கு உருவாகும் பற்றீரியா நுண்ணங்கிகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தேன்.

ஏதிர்காலத்தில் எனது இக்கண்டுபிடிப்பு முறையின் மூலம் ஏழைகள்,கல்வி கற்காதவர்கள் உட்பட அனைத்து சாதாரண மக்களும் தமது அடிப்படை மின்சார தேவை மற்றும் அன்றாட சேதனக் கழிவகற்றுலுக்காக தமது வீட்டிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பாவிப்பதே எனது நோக்கமாகும்.

இவ் உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் எமது இலங்கை நாட்டில் சுற்றுச் சூழலுக்கு தீமை ஏற்படுத்தும் வகையில் அன்றாடம் சேரும் சேதனக் கழிவுகளை உரிய முறையில் அகற்றி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இவ்வாறான பாரிய கலத்தை எமது நாட்டு அரசாங்கம் மீள் வடிவமைத்து செய்யுமானால் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சேவையாக இருக்கும்.

இவ் விஞ்ஞான கண்டுபிடிப்பை செய்வதற்கு வழிவகுத்த இறைவனுக்கும்,எனது வெற்றிக்கு உதவியாக இருந்த எனது தாய்,தந்தை உட்பட பாடசாலை,அதிபர் ஆசிரிய,ஆசிரியர்கள் உட்பட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த மாணவன் முஹம்மட் முனாப் இம்ஹாத் அஹமட் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்;பதிகளின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)