Breaking News

7.50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட வவுணதீவு-நெல்லூர் கிராமம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம்,இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 7.50 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு அதிகார சபையினால் புனரமைப்பு செய்யப்பட்ட வவுணதீவு-நெல்லூர் கிராமம் மக்கள் பாவனைக்காக நேற்று 26 ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

கிராம புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட நெல்லூர் கிராமத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நெல்லூர் கிராம திட்ட பெயர் பலகையை திரை நீக்கம் செய்து உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன் போது நெல்லூர் கிராம புனரமைப்பு திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு அதிதிகளினால் நெல்லூர் கிராமத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,புனர்வாழ்வு அதிகாரசபையின் செயற்பாட்டு பணிப்பாளர் என்.புகேந்திரன், மேலதிக பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீன், பிரதிப்பணிப்பாளர் வி.ஹூசைன், உதவிப் பணிப்பாளர்களான டி.எம்.ஜி.கயந்த திசாநாயக்க உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

7.50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட வவுணதீவு-நெல்லூர் கிராமத்தில் பல்தேவைக்கட்டடம், வீதி புனரமைப்பு, 2 கல்வெட்டுகள் அமைத்தல், நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு,   சிறுவர் பூங்கா, முன்பள்ளி புனரமைப்பு, விளையாட்டு மைதானம் புனரமைத்தல் உள்ளிட்ட 8 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)