Breaking News

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 14வது தினம் மரண வீடு சத்தியாக்கிரக போராட்டம்

சாதாரண மக்கள் எங்களது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவுக்கு அரசாங்கமும் அதிகாரிகளும் விளங்கிக்கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 14வது தினமாகவும் (06) திங்கட்கிழமை மரண வீடுகள் போன்று சவப்பெட்டிக்கு மாலை அணிவிக்கப்பட்டு விளக்கு கொழுத்தப்பட்டு வெள்ளைச்சீலை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மாகாண மத்திய அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரண்டு வாரமாக இந்த போராட்டத்தினை பட்டதாhரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

பல்வேறு அரசியல்வாதிகளும் வருகைதந்து வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறியிருந்தபோதிலும் இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டாத வகையில் தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டம்பெற்ற 1600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் 4500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் இந்த நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்காமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கிளையை சேர்ந்த உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் கருத்துதெரிவித்த மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த்,

14 நாட்களையும் கடந்து மிகவும் கஸ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் எமது போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.சாதாரண பொதுமகன் ஒருவர் எங்களது பிரச்சினைகளை விளங்கிக்கொண்ட அளவிற்கு அரசாங்கமோ அதிகாரியோ எமது பிரச்சினையை விளங்கிக்கொண்டு தீர்வினை வழங்கமுன்வரவில்லை.


வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் மூலம் அழுத்தங்களை வழங்குகின்றபோதிலும் இதுவரையில் தீர்க்கமான முடிவினை வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.எமக்கான தீர்வு எட்டப்படுவரையில் எமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது .(லியோன்)