Breaking News

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் செய்தி சேகரிக்க சென்றபோது தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளர்களாக கடமையாற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன்,நல்லதம்பி நித்தியானந்தன் ஆகியோரே இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

நேற்று கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பான செய்தி சேகரிக்க சென்றபோது குண்டர்கள் குழுவினர்களால் இரண்டு ஊடகவியலாளர்கள் துரத்திதுரத்தி தாக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் அங்கு முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்ததன் பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று கல்குடா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தனர்.

சுமார் 6 கி.மீற்றர் வரை துரத்திச்சென்று தாக்குதல் நடத்தியதற்காகவும், அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காகவும் சந்தேகத்தின் பேரில்இருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்ற இரு ஊடகவியலாளர்களும் முறைப்பாடு ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பதிவுசெய்துள்ளனர்.

தமக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கான பொறுப்பதினை தம்மீது தாக்குதல் நடாத்திய குழுவினரே பொறுப்பேற்கவேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். ((லியோன்)