Breaking News

உதிரம் கொடுத்து போராடும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்



மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இன்று பல்வேறு மாறுபட்ட வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மாதம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்போராட்ட வடிவங்கள் மாற்றப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

போராட்டத்தின் 31வது நாளாகிய இன்று காலை பட்டதாரிகள் ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் இரத்ததானமும் செய்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து வேலையற்ற பட்டதாரிகள் இந்த இரத்ததான முகாமை நடாத்தினர்.

தமது கல்வி ரோட்டில் வீணாகுவதைப்போன்று தமது இரத்தமும் வீணாகக்கூடாது என்ற நோக்குடன் இந்த இரத்தானமுகாம் நடாத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.

இந்த இரத்தானமுகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது     (லியோன்)