Breaking News

வீதி விபத்துக்களை குறைக்க- மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் மாணவர்களுக்கு- வீதி விபத்து தொடர்பில் விஷேடமாக விளக்கமளிப்பு-படங்கள்.


LOLC- எல்.ஓ.எல்.சீ. நிறுவனத்தின் முழுமையான அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை குறைக்க பல்வேறு விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வீதி விபத்து தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள், எல்.ஓ.எல்.சீ. நிறுவனத்தின் பிரதிநிதிகள்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி,மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலாலினால் வீதி விபத்துக்கள் எவ்வாறு இடம்பெறுகிறது அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது தொடர்பில் விரிவாக தமிழ் மொழியில் விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் மோட்டார் போக்குவரத்து சட்டங்களை மீறுவதால் ஏற்படும் வீதி விபத்துக்களில் உயிராபத்துக்களை உண்டுபண்ணிய  காணொளிகளும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அத்தோடு மாணவர்களுக்கு வீதி விபத்துக்களை தடுப்பது எவ்வாறு, மஞ்சல் கடவையில் எவ்வாறு மாணவர்களை கடக்க வைப்பது,மஞ்சல் கடவையில் மாணவர்கள் கடக்க முற்படும் போது ஏற்படும் வீதி விபத்துக்களை எவ்வாறு தடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பிலும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)