Breaking News

ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது ஐ.எஸ். தீவிரவாத தலைவருக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை...

ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது என்று ஐ.எஸ். தீவிரவாத தலைவருக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

தலிபான் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் தொடங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதம் இடையே மோதல் வெடித்தது. ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொலை செய்து உள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் ராணுவப்படையின் அதிகாரி நுமான் ஹாதிபி தெரிவித்து இருந்தார்.

ஐ.எஸ். தீவிரவாதம் சமீபத்தில்தான் ஆப்கானிஸ்தானுக்கு நுழைந்தது. தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து பல்வேறு பகுதிகளை பறித்து உள்ளது. தீவிரவாதிகள் கையில் உள்ள பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதம் தங்களது படைக்கு ஆட்களை சேர்த்து வருகிறது என்றும் ஆப்கான் ராணுவம் தரப்பு தகவல்கள் வெளியாகியது. இச்சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள நான்கார்ஹார் மாகாணம் ஊடுருவல்காரர்களுக்கு முக்கியமான பகுதியாக உள்ளது. அங்கு ஐ.எஸ். தீவிரவாதம் மீதான மோகம் அதிகரிப்பு காரணமாக புதிய கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு தீவிரவாதத்தால் புதிய போரை எதிர்க்கொண்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது என்று ஐ.எஸ். தீவிரவாத தலைவர்களுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால் ஐ.எஸ். தீவிரவாதம் தரப்பில் ஆப்கானிஸ்தானில் காலூன்றியதாக எந்தஒரு தகவலும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அல் பகாதிக்கு தலிபான் தீவிரவாதிகள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. “அமெரிக்காவிற்கு எதிரான புனிதப்போரில், அனைத்து இயக்கங்களும் (தீவிரவாத இயக்கங்கள்) ஒரு கொடி, ஒரு தலைவரின் கீழ் இணையவேண்டும்,” என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. கடிதம் தலிபான் தீவிரவாதிகளின் இணையதளத்தில் உருது, அரபிக் மற்றும் தாரி ஆகிய மொழிகளில் பதிவுவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.