தோனிக்கு அபராதம் விதித்தது தவறு: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்
இந்தியா– வங்காளதேசம் அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்தப்போட்டியின்போது இந்திய அணி கேப்டன் தோனி ரன் எடுக்க ஓட முயன்றபோது வங்காளதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரகுமானை இடித்து தள்ளியதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) விசாரணை நடத்தினார். தோனி உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டது நிரூபணம் ஆனதாக கூறி அவருக்கு 75 சதவீதம் அபராதம் விதித்தனர். தோனி வேண்டுமென்றே வங்காளதேச வீரரை இடித்து தள்ளவில்லை என்று இந்திய அணியின் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை போட்டி நடுவர் நிராகரித்தார். இதேபோல ஆடுகளத்தில் ஒழுங்கீனமாக 2–வது முறையாக நடந்து கொண்டதற்காக அந்த பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் இணைய தளத்தில் அவர் கூறி இருப்பதாவது. வங்காளதேச பவுலர் முஸ்தாபிகர் ரகுமானை இடித்து தள்ளிவிட்டதாக கூறி தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. போட்டி நடுவரின் இந்த முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள இயலாது. தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது தவறானது. பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடும் பாதையில் அந்த பவுலர் 2 முறை வந்து இருக்கிறார். இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
இதற்கிடையே வங்காளதேச பந்துவீச்சாளர் கூறும்போது, பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும் பாதையில் நான் சென்றது தவறு தான் என்று ஒப்புகொண்டுள்ளார்.



