உள்ளாடைகள் ஐந்தினை அணிந்து தங்க பிஸ்கட் கடத்திய கணக்காளர் கைது
நமது நிருபர்
ஐந்து கோடி ரூபா பெறுமதியான பத்து கிலோகிராம் தங்க பிஸ்கட்டுக்களை துபாயிலிருந்து உள்ளாடைகளுக்குள் மறைத்து கொண்டு வந்த இலங்கை யுவதியொருவரை கட்டுநாக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சந்தேக நபர் 31 வயதுடையவர் எனவும் அவர் தொழில் ரீதியாக கணக்காளர் எனவும் சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். அவர் வாரத்தில் மூன்று தடவைகள் துபாய் மற்றும் இலங்கைக்கிடையே பயணித்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் துபாய்க்குச் சென்றிருந்த இவர் பல்இ டுபாய் விமான சேவைக்குச் சொந்தமான எப்.இஸட். 577 இலக்க விமானத்தில் இன்று அதிகாலை 01.10 அளவில் வந்திறங்கியபோது சுங்க அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
நீண்டகாலமாக தங்கக் கடத்தல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தங்க பிஸ்கட்டுகள் இரண்டு பொதிகளாக தயாரிக்கப்பட்டு உடலின் மர்ம உறுப்புப் பகுதியில் மறைக்கப்பட்டிருந்ததோடு அவை விழுந்துவிடாதவாறு அதற்கு மேலாக உள்ளாடைகள் அணிந்திருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒரு பொதியில் 18 தங்க பிஸ்கட்டுக்களும் மற்றைய பொதியில் 82 தங்க பிஸ்கட்டுக்களும் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றுள் ஒரு தங்க பிஸ்கட்டின் நிறை 100 கிராம் ஆகும்.
சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துபாயில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் வழங்கப்பட்ட இந்த தங்க பிஸ்கட்டுக்களை ஐயாயிரம் ரூபா ஒப்பந்திலேயே நாட்டுக்குக் கொண்டு வந்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் கூறும் வழக்கமான பதில் இதுவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமான விசாரணை நடவடிக்கைகள் விமான நிலைய பெண் சுங்கப் பணிப்பாளர் லோசினி பீரிசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பிரதி சுங்கப் பணிப்பாளர் பிரியந்த சேனநாயக்கவின் நடவடிக்கையில் சுங்க அத்தியட்சகர்களான தர்சன சில்வா, நிமல் திலக்க, பிரதி சுங்க அத்தியட்சகர்களான நிசாந்த ஜயசிங்க, ஹசந்த குருகே, எம்.ஐ.உதய காமினி, பீ.எச்.யூ.ஐ.வஜேபால, உதவி சுங்க அத்தியட்சகர்களான நுவன் அபேநாயக்க, ரசிக சமங்சித் மற்றும் பிரதி பெண் சுங்க அத்தியட்சகர்களான நிலுக்ஷி பத்திரண, எரந்திகா ஹபராதுவ ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



