Breaking News

விமானத்தில் ரகசியமாக பதுங்கியவர்தரையிறங்கும் போது விழுந்து பலி!

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து, லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் அடிப்பாகத்தில், ரகசியமாக பயணம் செய்த ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்தார்.

 மயங்கி கிடந்த மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரிச்மாண்ட்ஸ் என்ற இடத்தில், ஒரு வலைதள நிறுவனத்தின் கூரையில், இறந்தவரின் உடல் கிடந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமானத்தின் டயர் பகுதியில், அந்த இருவரும் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
ஜோகனஸ்பர்க் - லண்டன் இடையே, 12,875 கி.மீ.,யை, 12 மணி நேரத்தில் அந்த விமானம் கடந்துள்ளது. அப்போது, மைனஸ் 60 டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான குளிர் காரணமாக, இருவரும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதே போல், 2012ல், அங்கோலாவில் இருந்து வந்த விமானம், ரிச்மாண்ட்ஸ் அருகே தரையிறங்கும் போது, ஒருவர் விழுந்து பலியானார்.

கடந்த ஆண்டு, கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் தீவுக்கு வந்த ஒரு விமானத்தின் டயர் பகுதியில் ரகசியமாக பயணம் செய்த, 15 வயது சிறுவன் பிடிபட்டான்.
விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடம் உள்ளது. இங்கு ஒளிந்து கொள்பவர்கள், டயர் எப்போது உள்ளிழுக்கும் அல்லது வெளியேறும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குளிர் காரணமாக, இதை கணிக்க தவறுவோர், டயரில் சிக்கியோ அல்லது கீழே தள்ளப்பட்டோ உயிரிழக்கும் அபாயம் உள்ளது. விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து, விமானத்தின் அடிபாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர்.
முதலில் எகிறிக் குதித்து, விமானத்தின் டயர் மீது ஏறி விட்டால், அதன் பின், டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என, விமான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.