ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து ஆவணங்களை திங்கள் முதல் மக்கள்பார்வைகென...
இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான ஆவணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். இதன்படி, நாள் ஒன்றுக்கு ஓர் ஆவணம் என்ற அடிப்படையில் எதிர்வரும் 22ம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் ஒன்பது பேரைக் கொண்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இந்த ஆவணங்களை வெளியிடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்பதனால் இவ்வாறு ஆவணங்களை வெளியிட்டு கடந்த மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை மக்களுக்கு அம்பலப்படுத்த தீர்மானித்துள்ளோம் என நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.



