ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்தனர்
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் சித்திக் பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி மற்றும் அரசு அலுவலங்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் 31 பேர் பலியாகினர், 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்று மருத்துவமனை மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹவுத்திகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. ஏமனில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இதில் சுமார் 142 பேர் பலியாகினர்.
இதனையடுத்து தற்போதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தரப்பில் மசூதி மற்றும் முக்கிய தலைவர்கள் வீடுகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடான ஏமனில், அதிபர் மன்சூர் ஹாதியை அதிகாரத்தில் இருந்து விரட்டி விட்டு, அந்த நாட்டினை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈரான் ஆதரவு பெறற் ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் இணைந்தது. இவர்களை எதிர்த்தும், மன்சூர் ஹாதியை மீண்டும் பதவியில் அமர்த்தவும் சவுதி அரேபியா தலைமையில் 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களில் ஈடுபட்டது. பின்னர் ஐ.நா. தலையிட்டு போர் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.



