Breaking News

புகையிலை எனும் போதை

புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகெங்கிலும் மரணமடைபவர்கள் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில், 6 லட்சம் பேர் புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் அல்லர். எனினும் மற்றவர்கள் புகைப் பிடிக்கும்போது அருகில் இருந்து அதை சுவாசிப்பதால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எனும் தகவலும் உள்ளது. 
 பீடி, சிகரெட் பிடிப்பதற்கும் இருதய நோய்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது.
 சிகரெட்டில் அடங்கியுள்ள அம்சங்கள் என்ன? தார் எனும் பழுப்பு நிற பசை சிகரெட் புகையில் அதிகம் உண்டு. சிகரெட் புகையை மூச்சுடன் உள்இழுத்து நுரையீரலுக்குள் செலுத்துகிறார் புகைப் பிடிக்கும் நபர். நுரையீரலில் குளிர்ச்சியைப் பெற்ற சிகரெட் புகை அங்கேயே படிந்து விடுகிறது. ஒரு சிகரெட்டில் சுமார் 4,000 வகையான ரசாயனங்கள் உள்ளன என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.
 அவற்றில் "அசெட்டோன்' எனப்படும் ஒன்று, நாம் நக பூச்சைக் கழுவி எடுக்கப் பயன்படுத்தும் கொடூரத் தன்மை கொண்ட ரசாயனப் பொருள். "சயனைட்' எனப்படும் விஷம், "பூடேன்' எனப்படும் எரிபொருள், ராக்கெட்டுகளை வானத்துக்குள் உந்தித் தள்ள வெடிபொருளாக பயன்படுத்தப்படும் "மெத்தனால்' ஆகியவற்றுடன் "நேஃப்தனால்', "ரேடோன்' எனப்படும் கதிர் இயக்க வாயுக்களும் சிகரெட் புகையிலையில் உண்டு.
 மேலும், நம் வீட்டில் தரையையும், கழிப்பறைகளையும் மிகவும் சுத்தமாகக் கழுவ பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருளான "அமோனியா', பயிர்களில் உட்காரும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் "டி.டி.ட்டி.' எனும் ரசாயனப் பொருள், "போலோனியம் 210', "சல்ஃபூரிக் அமிலம்', "ஆர்சனிக்' எனும் விஷம், கார் பேட்டரியில் உள்ள "கேட்மியம்' எனும் அமிலம், "நிகோடின்' எனும் போதைப் பொருள் ஆகியனவும் சிகரெட்டில் உண்டு.
 40 வயதுக்குள்பட்ட இளைஞர்களுக்கு நிச்சயமாக இருதய நோய் உருவாகக் காரணம் சிகரெட் புகைக்கும் பழக்கமே. இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் 4 பேரில் ஒருவர் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரே. 
 குறிப்பாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புச் சத்து, நீரிழிவு நோய் ஆகியவை ஏற்கெனவே இருந்தால் புகைப் பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருதய நோய் வருவதைத் தடுக்கவே முடியாத சூழ்நிலைக்குக் கொண்டு சென்று விடும்.
 நம் நாட்டின் கிராமப்புறங்களில் இதுபோன்ற நோய்களை மருத்துவச் சோதனைகள் செய்து கண்டுபிடிக்கும் பழக்கம் யாருக்குமே கிடையாது என்பதால் நிறைய பேர் இதுபோன்ற நோய்கள் தங்களுக்கு இருப்பது தெரியாமலேயே பீடிகளை புகைப்பார்கள். தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கதாநாயகனும், வில்லனும் சர்வசாதாரணமாக சிகரெட் பிடிப்பது ஆண்மையின் அடையாளமாகத் தெரியும் நிலை நாட்டில் உள்ளது.
 சரி, 30 வயது இளைஞர்களுக்கு நுரையீரலில் புற்றுநோயும், இருதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும் புகைப் பிடிக்கும் பழக்கத்தால் உண்டாகிறது என்ற மருத்துவத் தகவலையும் சேர்த்துக் கொள்வோம். 
 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.), இந்தியப் புகையிலை கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் நம் நாட்டில் 8 விநாடிகளுக்கு ஒரு சாவு புகைப் பழக்கத்தால் ஏற்படுகிறது என கணக்கிட்டுள்ளனர்.
 இதற்கான காரணம், நம் நாட்டில் இன்றைய காலகட்டத்தில் 25 கோடி பேர் புகைப் பிடிப்பவர்கள். நம் நாட்டு மக்கள்தொகையில் இது சுமார் 25 சதவீதம். 57 சதவீத இளைஞர்களும், 3 சதவீத இளம்பெண்களும் நம் நாட்டில் புகைப் பிடிப்பவர்கள். இதைவிடவும் கொடுமையான தகவல் இவர்களில் 17 சதவீத ஆண்களும், 9 சதவீத பெண்களும் 13 முதல் 17 வயதுக்கு உள்பட்டவர்கள். நிறைய பேர் 15 வயதிலேயே புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள்.
 திருநெல்வேலி மாவட்டத்தில் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் 14 வயதிலேயே புகைப் பிடிப்பது என்பது சர்வசாதாரணமான பழக்கம். காரணம், தென் இந்தியாவில் முதன் முதலாக பீடி உற்பத்தியைத் தொடங்கி நான்கு மாநிலங்களுக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் பீடியை அனுப்பி வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் எங்கள் கிராமத்தில் உண்டு. வீட்டில் உள்ள பெரியவர்கள்கூட நாங்கள் பீடி புகைப்பதைத் தடுத்ததில்லை.
 பிற்காலத்தில் கல்லூரி ஆசிரியராகப் பணியில் இருந்தபோது, சேலம் நகரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றிருந்தேன். அவர் என்னை சோதித்து மருந்துகளை எழுதிக் கொடுத்த பின், "புகைப் பிடிப்பதைக் கைவிட்டு விடுங்கள். அதன் பாதிப்பிலிருந்து விடுபட மருத்துவமே இல்லை' எனக் கூறினார்.
 அதன்பின்பு அரசு அதிகாரியாக இருந்த நிலையில் நான் புகைப்பதை முழுமையும் நிறுத்தி விட்டேன். அப்படி நிறுத்திய பின் 20 ஆண்டுகள் கழிந்த பின் ஒரு மருத்துவ அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோதனைகளுக்கு உள்படுத்தபட்டபோது எனது நுரையீரல் முழுமையாக இயங்கவில்லை என மருத்துவர்கள் கூறினார்கள்.
 நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவரா எனக் கேட்ட மருத்துவரிடம், 20 ஆண்டுகளுக்கு முன் நான் புகைப் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் எனக் கூறினேன். ஆனால், புகைப் பழக்கத்தினால் நுரையீரல் பாதிக்கப்பட்டால், மறுபடியும் முழு வளர்ச்சி அடையாது என மருத்துவர் கூறியபோது, பல ஆண்டுகளுக்கு முன், எல்லா கெட்ட பழக்கங்களையும் விட அதிமோசமான கெட்ட பழக்கம் புகைப் பிடித்தலே என சேலம் மருத்துவர் கூறியது எனது நினைவுக்கு வந்தது.
 பெரிய புகையிலை நிறுவனங்கள் இந்தியா, இந்தோனேசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளில்தான் தங்கள் வர்த்தகத்தில் சக்கை போடு போடுகின்றன. இந்தியாவில் ஒரு நாளைக்கு 5,500 சிறுவர்கள் புதிதாகப் புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று கூறுகிறது உலக வங்கியின் ஆய்வு. தற்சமயம் 17 வயதுக்கு உள்பட்ட 40 லட்சம் சிறார்கள் புகைப் பழக்கத்தில் உள்ளனர்.
 புகைப் பிடிக்கும்போது, புகையிலையில் உள்ள நிகோடின் எனும் பொருள் நம்மை புகைப் பிடிக்கும் நாட்டமுடையவர்களாகச் செய்கிறது. காபி அருந்துபவர்கள் புகைப் பிடித்தால், தினமும் காபி அருந்தும்போதே புகையிலையை மனம் நாடும். இதுதான் நிகோடின் செய்யும் அழுத்தம். 
 அதுபோலவே, தேர்வுக்கு இரவு கண் விழித்துப் படிக்க புகைப் பிடிப்பது உதவும் என நண்பர்கள் கூறுவதைக் கேட்டு அந்த பழக்கத்தை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அதன்பின், கண் விழித்துப் படிக்கிறார்களோ, இல்லையோ இரவு நேரங்களில் அவர்களது மனது சிகரெட்டை நோக்கிப் போகும். இதைச் செய்வதும் நிகோடின் எனும் ரசாயனப் பொருளே.
 ஆக, தனி மனிதனின் உறுதியான மனசக்தியுடன்தான் அவன் இதுபோன்ற ஒரு உயிர்க்கொல்லி பழக்கமான புகைப் பழக்கத்தைக் கைவிட முடியும் என்பதை நாம் சந்திக்கும் புகைப் பிடிப்பவர்களுக்கு உணர்த்துவது அவசியமாகிறது. 
 ஆனால், புகைப் பிடிக்கும் பழக்கத்தால் பெரிய அளவில் தீமைகள் உருவாகிவிட முடியாது என நமது நாடாளுமன்ற உறுப்பினர்களே கூறுவார்களேயானால் இதை என்னவென்று சொல்வது எனும் கேள்வி எழுகிறது.
 உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் மக்களவைத் தொகுதியின் இப்போதைய உறுப்பினர் சியாமா சரண் குப்தா கூறுகிறார்: நிறைய புகைப் பிடிக்கும் நபர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்த என்னால் முடியும். 
 நிறைய பீடிகளை புகைக்கும் அவர்கள் இன்றுவரை எந்த நோயாலும் பாதிக்கப்பட்டதில்லை. புகைப் பிடித்தால் கொடிய நோய் பரவும் என எழுதி வைப்பதுபோல், நிறைய அரிசி, உருளைக் கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று ஏன் எழுதுவது இல்லை?
 அஸ்ஸôம் மாநிலம், தேஜ்பூர் மக்களவை உறுப்பினர் ராம்பிரசாத் சர்மா கூறுகிறார்: புகைப் பிடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் உருவாகுமா என்பது விவாதத்துக்குரியது. எனக்குத் தெரிந்த வயதான இரண்டு பெரியவர்கள் தினமும் ஒரு பாட்டில் மது குடிப்பவர்கள், 60 சிகரெட்டுகளை புகைப்பவர்கள். ஒருவர் தனது 86 வயதில் இறந்து விட்டார். மற்றொருவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார்.
 "நம் நாட்டின் எந்த ஆராய்ச்சியிலாவது, புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் வருவது நிரூபிக்கப்பட்டுள்ளதா?' என மக்களவை உறுப்பினர் திலிப் குமார் காந்தி வினவுகிறார். இவர்தான் புகையிலை சட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் தலைவர்.
 இதுபோன்று விதிவிலக்காக கருத்து கூறுபவர்களை விட்டுவிட்டு, சாதாரண மனிதர்கள் மத்தியில் நடைபெறும் நிகழ்வுகளை ஆராய்ந்தால், புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள 100 பேரில் 19 பேர் இந்தப் பழக்கம் உருவாக்கிய நோய்களால் இறந்து
 விடுகிறார்கள். 
 இதைப் புரிந்து கொள்ளாதவர்களாக இந்த மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதுபற்றி சுமார் 2,300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன என்பதை இவர்களுக்கு யார் விளக்குவது எனத் தெரியவில்லை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் புகையிலை வியாபாரத்தை ஊக்குவிக்கிறார்களா அல்லது புகைப் பிடிப்பவர்களின் மனதை அமைதிப்படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
 இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல் நிறைய பேர் விஞ்ஞானரீதியான அறிக்கைகளை விடவும் சுய அனுபவத்தில் கிடைத்த விவரங்களை நம்பி புகைப் பிடிப்பதால் எந்தத் தீமையும் இல்லை எனக் கூறுவது விந்தையிலும் விந்தை.
 இந்தியாவில் ஒரு நாளைக்கு 5,500 சிறுவர்கள் 
 புதிதாகப் புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று 
 கூறுகிறது உலக வங்கியின் ஆய்வு. தற்சமயம் 
 17 வயதுக்கு உள்பட்ட 40 லட்சம் சிறார்கள் 
 புகைப் பழக்கத்தில் உள்ளனர்