பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு
பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும்இ இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை (28) காங்கேயனோடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவை இணைந்த கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மக்களின் பெயரால் செய்யப்பட்ட அரசியல் நமக்கு எந்த முன்னேற்றத்தை தந்திருக்கிறது என நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று காலை மீனவர்கள் சிலர் எம்மைச் சந்தித்தார்கள். அவர்கள் முன்வைத்த கோரிக்கை மிகவும் அடிப்படையான தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கான கோரிக்கைகளாகும். அவர்களது வலைகள் வெட்டப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் முறையிட்டார்கள். இவர்களுக்கு இந்தத் துன்பங்களை கொடுப்பது மாற்று சமூகத்தினரல்ல. இதற்குக் காரணம் நம்மால் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்ட சக்திகளாகும். அவர்களுக்கு எதிராக கருத்துச் சொன்னால் இவ்வாறான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுதந்திரமாக ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தியதற்காக இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு அசிட் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதான் நாம் இந்தப் பிரதேசத்தில் வளர்த்து விட்டிருக்கின்ற அரசியல்.
காங்கேயனோடைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது நாம் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் எதிரியோடும் நீதியாக நடந்து கொள்பவர்கள் என்ற அடிப்படையில் தீர்க்கமாக விசாரித்த பின்னரே நாம் அதனை உறுதிப்படுத்தினோம்.
நாம் மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இங்குள்ள சமாதானக் கிராமத்தை அமைத்தோம். எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் அனைத்து வித தடைகளும் இருக்கத்தக்க எந்தவித பாரபட்சமும் இன்றி நூறு வீத நேர்மையுடன் நாம் அதனை செய்து முடித்தோம். இன்று அவை சிறப்பாக இருக்கின்றன. அதற்கு எமது அணுகுமுறையும் செயற்பாடுகளுமே காரணமாகும்.
நாம் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அரசியலிலே எம்மை ஏமாற்றுவதையே அவர்களது பிழைப்பாகவும் மூலதனமாகவும் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிந்திக்க மாட்டோம் என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வதையெல்லாம் அங்கீகரிப்போம் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாராலும் தோற்கடிக்க முடியாது என்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ அராங்கத்தை விழிப்புணர்ச்சி பெற்று வாக்குகளால் மாற்றிய மக்கள் நாங்கள்.
தேர்தல் பிரச்சாரம் என்றால் அப்பட்டமான பொய்களைக் கூறுகிறார்கள். கூட்டங்களில் பேசுவதைக் கேட்பதே ஒரு பாவமாகிவிடுமோ என்று எண்ணுகின்ற அளவிற்கு பொய்யும் புரட்டும் இன்று அரசியல் மூலதனமாக மாறி இருக்கிறது. இந்த அரசியலுக்கு நாம் முற்றுப்பள்ளி வைக்க வேண்டும். நமது வாக்குப் பலத்தின் மூலம் அதனை தோற்கடிக்க வேண்டுமென்றால் நாம் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆசனங்களில் நான்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். இறுதியாக இருக்கின்ற ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்ற கட்சிக்குத்தான் இருக்கிறது. அது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்திருக்கின்ற இந்தக் கூட்டணியால்தான் முடியும்.
தேவையுடையவர்களுக்கு அபிவிருத்தி, தகுதியுடையோருக்கு வேலை வாய்ப்பு இதுவே எமது அபிவிருத்திக் கோட்பாடாகும். ஒரு பிரதேசத்தை மிகச் சிறப்பாக அபிவிருத்தி செய்து இன்னொரு பிரதேசத்தின் அடிப்படை தேவையினைப் புறக்கணிக்கக் கூடாது. இந்தப் பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழ் பிரதேசங்சங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.
ஒவ்வொருவரும் அடுத்தவர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டு இனவாதத்தால் இனவாதத்தை வளர்க்கிறார்கள். பிரதேச வாதத்தால் பிரதேச வாதத்தை வளர்க்கிறார்கள். நாம் சொல்வதெல்லாம் பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும். அந்த மனித நேயத்தை உருவாக்குகின்ற புதிய தொடக்கத்தினை ஆரம்பிக்க வேண்டும். இதுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் கொள்கையும் செயற்பாடுமாகும்.
அரசியல் அதிகாரம் இருக்கின்றபோது அதனை நீதியாகச் செயற்படுத்தினால் நிருவாகக் கெடுபிடிகளிலிருந்து இலகுவாக விலகிக் கொள்ள முடியும். இவ்வாறு அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கைப பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோர் உட்பட பெருந்திரளான வாக்காளர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ.அப்துல் நஸார்



