மட்டக்களப்பில் தனித்து போட்டியிட முடிவு.
தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். அத்துடன், இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறும் கூட்டத்தின்போது வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (07) கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த எமது கட்சியை அக்கூட்டமைப்பிலிருந்து விலக்கியுள்ளதாக அக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், எமது கட்சியை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரையில் எமக்கு கிடைக்கிவில்லை' என்றார். 'இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எமது கட்சி சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேட்டியிடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாமலுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே எமது கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்