தேயிலையின் விலை அதிகரிக்கும்வரை சம்பள உயர்வு இல்லை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தொழிலாளர் அணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதன் காரணமாக தெடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்கள் மெதுவாகப் பணிபுரியும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது சம்பந்தமாக தொழிலாளர் அணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க அம்மணியின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தொடர்பில் கவனத்தில் கொள்வதற்கு உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரிக்கும் வரை சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையினை தாமதப்படுத்த வேண்டுமென தோட்ட உரிமையாளர்கள் சங்கம் யோசனை தெரிவித்தது.
அதுவரை தொழிலாளர்கள் ஆரம்பித்திருக்கின்ற மெதுவாகப் பணிசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துமாறும் தோட்டத் தொழிற்சங்க சம்மேளனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் மெதுவாகப் பணிசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேயிலைத் தோட்ட சபைகளுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.
இந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்ததையிலிருந்து விலகி மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தையினை இம்மாதம் 15ந் திகதிவரை பிற்போட்டுள்ளனர்.
இம்முறை தொழிலாளர்களுக்கு 64 வீதம் சம்பள அதிகரிப்பினை வழங்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த சம்பள அதிகரிப்பினை வழங்குமிடத்து தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடைவதற்கான எந்தவித அபாயமும் இல்லை என தோட்ட அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.
நமது நிருபர்



