Breaking News

எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை?

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார்.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில வகை நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதால், இளவயது விந்தணுக்களை சேமித்து வைத்து அதைப்பயன்படுத்தி பிள்ளைகளை பெற்றுக்கொள்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்கால நோய்களை தடுக்க முடியும் என்கிறார் அவர்.

"வயதான ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் சில ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆண்களுக்கு வயதாக, ஆக, அவர்களின் விந்தணுக்களில் மரபணுமாற்றக்கோளாறுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மரபணு மாற்றங்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணு மாற்றத்தால் ஏற்படக்கூடிய குறிப்பிட்ட சில வகையான பாதிப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய மரபணு பாதிப்புகள் பலவகைப்பட்டன. 

குறிப்பாக நரம்பு மண்டலம் மற்றும் உளவியல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. ஆடிசம் என்கிற மனவளர்ச்சி குன்றிய நிலை, ஸ்கிட்சோப்ரீனியா என்கிற மனப்பிறழ்வு நோய் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் உருவாக்கும் வகையில் வயதான ஆண்களின் விந்தணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது," என்று பிபிசியிடம் விளக்கினார் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித்.

இந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில் பிரிட்டனில் இருக்கும் 18 வயதான ஆண்கள் அனைவரின் விந்தணுக்களையும் தேசிய சுகாதாரச் சேவையின் மருத்துவமனைகளில் சேகரித்து உறைநிலையில் பாதுகாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் அவர்.

பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் வயதான ஆண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்தபடி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொதுவாகவே ஆண்கள் தந்தையாகும் சராசரி வயதின் அளவும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக 1990களில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஆண்கள் தந்தையாகும் சராசரி வயது 31 ஆக இருந்தது. அது தற்போது 33 வயதாக அதிகரித்திருக்கிறது