தேனிலவு போவது போன்று சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர முயன்ற யு.எஸ். ஜோடி கைது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் தம்பதி சிரியாவுக்கு தேனிலவு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டு கிளம்பினர். ஆனால் விமான நிலையத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஓதா தகலல்லா(22). இமாமின் மகனாகிய அவரும் போலீஸ் அதிகாரியின் மகளான ஜேலின் தெல்ஷான் யங்(20)கும் காதலித்து வந்துள்ளனர். மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கையில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
லிவ் இன் முறைப்படி வாழும் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர் அந்த அமைப்பில் சேர முடிவு செய்தனர். இது குறித்து அவர் சமூக வலைதளங்களிலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஐரோப்பாவுக்கு தேனிலவுக்கு செல்வது போன்று சென்ற அங்கிருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முடிவு செய்தனர். முதலில் இஸ்தான்புல் செல்ல நினைத்தனர். ஆனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஐரோப்பாவை தேர்வு செய்தனர். இதற்கிடையே அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் திட்டம் குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கொலம்பஸில் உள்ள விமான நிலையத்தில் விமானத்திற்காக அந்த ஜோடி காத்திருந்தபோது கைது செய்யப்பட்டது. யங் அண்மையில் தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி அமெரிக்காவில் உள்ள சில ராணுவ நிலைகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்களை பார்த்து பெருமைப்பட்டுள்ளார். கம்ப்யூட்டர், மீடியாவில் நாங்கள் கைதேர்ந்தவர்கள். எதையும் விரைவில் கற்றுக் கொள்வோம். எங்கள் திறமையை வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்ய நினைத்தோம் என்று அந்த ஜோடி தெரிவித்துள்ளது.