ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே ஜெனிவா செல்வது பற்றி முடிவு
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்குப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஜெனிவா செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இதுதொடர்பாக ஊடகங்களின் மூலம் நானும் அறிந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் சில உறுப்பினர்கள் ஜெனிவா செல்லக் கூடும்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜெனிவா செல்வது பற்றி எந்த முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லை.
இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, வெளியிடப்பட்ட பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.