Breaking News

காடைத்தனமான அரசியலை ஒருபோதும் செய்யப் பணிக்காதீர்கள் காத்தான்குடியில் முதலமைச்சர்.

பாடசாலைக்குள் அரசியல் செய்யும் கலாச்சாரம் உடைத்தெறியப் படவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நிகழ்வில் ஆய்கூடத்தைத் திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுக்கின்ற முதலமைச்சராக ஒருபோதும் நான்  இருக்கமுடியாது. எந்தவொரு அதிகாரமாக இருந்தாலும், அதை விட்டுக்கொடுக்க முடியாது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. எனது முதலமைச்சர் காலத்தில் எந்தவொரு அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கூறி வருகின்றேன்.

நியாயமான காரணமில்லாமல் எந்தவொரு ஆசிரியரையும் இலகுவாக இடமாற்ற முடியாது. இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நடக்கவேண்டும்.

நான் உட்பட எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும், பாடசாலைக்குள் அரசியலைக் கொண்டுவரக்கூடாது. அதற்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழு வேண்டும்.

ஓட்டமாவடியில்  நேற்று புதன்கிழமை பிரதியைமச்சர் அமீர் அலி; பல குழுக்களை நியமித்து நாங்கள் பாடசாலை கட்டடங்களை திறக்கப்போகின்றோம் என்றால் கடைகளை மூடுங்கள் அல்லது மாணவர்கள் பாடசாலைக்கு போகக் கூடாது. இல்லாவிட்டால் நான் வந்து திறக்கின்றேன் என்றெல்லாம் கூறியுள்ளார். இது நாகரிகமான அரசியலா என நான் கேட்கின்றேன்.

முழு அதிகாரமும் மாகாண சபைக்கு இருக்கின்றது. எந்தவொரு அரசியல்வாதிக்கும் வழங்கப்படும் நிதி அவர்களுடைய சொந்த நிதியல்ல. மக்களுடைய நிதி என்பதை புரிந்துகொள்ளும் அரசியல் தலைமைகளாக மாறவேண்டும்.

நிதி வழங்கியவர்களே கட்டடத்தை திறக்க வேண்டுமென்றிருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்தக் கட்டிடத்தை திறக்க வேண்டும்.

நாகரிகமான அரசியல் கலசாரத்தை செய்ய வேண்டும். மிகவும் மன வேதனைப்பட வேண்டிய விடயமானது இந்தப் பாடசாலையில் இரவோடு இரவாக வந்து திறமையைக் காட்டியது போன்று,  மாணவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஆய்வுகூடத்திற்கு எண்ணெய்; ஊற்றுவது, கதவை உடைப்பது என்பது என்ன அரசியல் கலாசாரம் என நான் கேட்கின்றேன். இந்தப் பாடசாலைக் கட்டடத்தை நான் வந்து திறப்பதற்கு ஏற்ற மாதிரி இதை மாற்றியிருந்தீர்கள் அதற்காக நான் நன்றி கூறுகின்றேன்' என்றார்.