17 நாட்களில் 330 கிலோ மீற்றர் ஒளிக்கான யாத்திரை குழுவுக்கு காத்தான்குடியில் இருந்து நிதி வழங்கி வைப்பு.
தவிர்க்ககூடிய குருட்டுதன்மையை நீக்குவதற்கு விஷன் 2020 எனும் முயற்சிகளுக்கு நன்கொடையைளர்கள் மிக முக்கிய பங்கை ஆற்றிவருவதன் நோக்காகக் கொண்டு சுகாதார அமைச்சின் விஷன் 2020 செயலகத்தின் ஏற்பாட்டில் பார்வைக்காக கிழக்கிலிருந்து மேற்கிற்கு நடக்க நாம் உறுதியளிப்போமா? எனும் தொனிப்பொருளில் ஒளிக்கான யாத்திரை இன்று 26 வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடியை வந்தடைந்தது.
காத்தான்குடியை வந்தடைந்த மேற்படி ஒளிக்கான யாத்திரை குழுவை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வரவேற்றதுடன் ,அதற்கான நிகழ்வொன்றையும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்தது.
மேற்படி நிகழ்வு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,காத்தான்குடி வைத்தியசாலை,நகர சபை,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,இராணுவம்,தாதியர் கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,ஜம்இய்யதுல் உலமா ,சுகாதார அமைச்சு போன்றவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஒளிக்கான யாத்திரையில் கலந்து கொண்டோர் ரூபா 5500 .செவழித்து வெண்புரை நோயினால் குருட்டுத்தன்மை அடையும் ஒரு நோயாளிக்கு பார்வையைக்கொடுங்கள் எனும் பதாயையை ஏந்தியிருந்தனர்.
பார்வையை வழங்குதல் வாழ்வை வழங்குதலாகும் எனும் உயரிய பணிக்காக காத்தான்குடியிலிருந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,சிட்டி ஒப்டிகல் ,காத்தான்குடியிலுள்ள பாடசாலைகள்,பிரதான வீதியிலுள்ள கடைகள் ஆகியவற்றின் ஊடாக உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம்,சுகாதாரப் பரிசோதகர்கள்,காத்தான்குடி சம்பத் வங்கி போன்றவற்றின் நிதிகளும் இதன் போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவிடம் உத்தியோகபூவமாக கையளிக்கப்பட்டது.
குறித்த ஒளிக்கான யாத்திரை 17 நாட்களில் 330 கிலோ மீற்றர் இலங்கையின்; கிழக்கில் மட்டக்களப்பில் இருந்து நவம்பர் 26 திகதி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப கால மதிப்பீட்டின்படி இலங்கையில் வெண்பிறை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு மில்லியனுக்கு மேல் உள்ளனர் எனவும் இத் தொகையை நீக்குவதற்கு வருடத்திற்கு குறைந்தது 200,000 சத்திரசிகிச்சைகளாவது செய்யப்பட வேண்டும் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-


