Breaking News

மழைக் காலத்தில் நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

மழைக் காலத்தில் உணவு சார்ந்த கவனம் மிகவும் அவசியம். ஏனெனில், மிக எளிதாக பாக்டீரியா தொற்று உணவுகளின் மூலமாக பரவ வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் தான் மக்களை பாடாய் படுத்தும். எனவே, நீங்கள் சாப்பிடம் உணவுகள், இந்த தொல்லைகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டவையாக இருக்க வேண்டியது முக்கியம்.

வைட்டமின் ஏ மற்றும் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள் சளி, காய்ச்சலை எதிர்த்து போராடும் குணம் வாய்ந்தவை. உணவு மட்டுமின்றி, சுகாதாரத்திலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம், சமையல் அறையில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீரின் மூலமாக தான் அதிகமாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுகின்றன....

கேரட் 
கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ மழைக்காலத்தில் தாக்கம் ஏற்படுத்தும் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது. இது தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. எனவே, மழைக் காலத்தில் நீங்கள் தவறாமல் கேரட் சாப்பிட மறக்க வேண்டாம்.

கிரீன் டீ 
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளன. இவை, பாக்டீரியா தாக்கம் அதிகரிக்காமல் உடலை பாதுகாக்க உதவுகிறது. மழைக் காலத்தில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கிரீன் டீ பருகுவது உடலுக்கு நல்லது. மேலும், இதுவும் சளி, காய்ச்சல் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கும் திறன் கொண்டது ஆகும்.

காளான் 
காளான் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் உணவாகும். இது மழைக் காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும், இயற்கையாகவே இது உடலில் கிருமிகளை கொல்லும் திறன்கொண்ட செல்களை அதிகரிக்க செய்கிறது. எனவே, மழைக் காலத்தில் காளானை உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

பூண்டு 
பொதுவாகவே பூண்டு உடலுக்கு மிகவும் நன்மை விளைவிக்கும் உணவாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பூண்டு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த உணவாகும். மேலும் இது கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்க கூடியது. வெறும் பூண்டை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணலாம்.

தேன் 
மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனைக்கு தீர்வுக் காண மிகவும் பாதுகாப்பான, எளிய உணவு தேன். இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா குணம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. இரவு உறங்கும் முன்பு தேனை பாலில் கலந்து கொஞ்சம் பருகிவிட்டு படுத்தால் உடலுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.