இலங்கையில் கொடிகட்டி பறக்கும் இந்திய கிட்னி வியாபாரம் !
இலங்கை தலைநகரான கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அங்கு சிறுநீரக விற்பனை நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றையமைத்து இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளை சுமார் 7 தனியார்மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், சிறுநீரகத்தை பெற்றுக் கொள்பவரும் அதனை அன்பளிப்பவரும் ஒரே நாட்டை சேர்ந்தவராக இருத்தல் அவசியமாகும். இந்த விதிமுறைகளை மீறியவகையில் இந்தியாவில் இருந்து சிறுநீரகம் விற்க விருப்பம் தெரிவிக்கும் நபர்களை இங்கு அழைத்துவந்து கிட்னி வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதாக தமிழ் பத்திரிகையொன்றில் கடந்த மாதம் செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது.
இவ்வகையில், சிறுநீரக விற்பனைக்காக இலங்கைக்கு ஒருவரை அனுப்பியதாக தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் ஒரு மாணவர் கைதானார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்யவும், வெளிநாட்டவர்களிடம் இருந்து சிறுநீரகங்களை தானமாக பெறவும் இலங்கை அரசு கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க இரு பெண் டாக்டர்கள் அடங்கிய மூன்றுபேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து இலங்கை சுகாதாரத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இன்று உத்தரவிட்டுள்ளார்.



