மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்
கொழும்பில் கடந்த 16ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் கலாசாலையிலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்தி பூங்காவரை சென்றது. இதில் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கடந்த வருடம் உறுதியளிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
மேலும், வேலைவாய்ப்புக் கோரி கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கையிலுள்ள திணைக்களங்களில் 32 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும்போதிலும், அவற்றுக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான எதுவித நடவடிக்கையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக, பட்டதாரிகள் தொடர்பில் எதுவித தேசிய கொள்கையும் புதிய அரசாங்கத்திடம் இல்லை. தேசிய கொள்கையொன்றை வகுப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெறும் சந்தர்ப்பம் ஏற்படும்.
தேசிய கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறுவோருக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்கும் அரசாங்கம், மூன்று நான்கு வருடங்கள் கற்று பட்டம் பெறும் எங்களை உதாசீனம் செய்கின்றது என பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .