ஹாட்ரிக் தோல்வியை மும்பை அணி தவிர்க்குமா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 14–வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 14–வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2–வது ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதைத்தொடர்ந்து குஜராத் லயன்சிடம் 3 விக்கெட்டிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 9 விக்கெட்டிலும் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து மும்பை அணி 2–வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலவீனமாக காணப்படுகிறது. உள்ளூர், வெளிநாடு வீரர்கள் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பெங்களூர் அணியை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு சவாலானது.
பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் 45 ரன்னில் ஐதராபாத்தை வீழ்த்தியது. 2–வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சிடம் 7 விக்கெட்டில் தோற்றது. மும்பையை வீழ்த்தி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
குழந்தை பிறந்துள்ளதால் கிறிஸ் கெய்ல் நாடு திரும்பியுள்ளார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார். டி வில்லியர்ஸ், கேப்டன் விராட் கோலி, வாட்சன், சர்பிராஸ்கான் போன்ற சிறந்த வீரர்கள் பெங்களூர் அணியில் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 9 போட்டியிலும், பெங்களூர் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.



