மனித மூளைக்கு இணையான கணணி கண்டுபிடிப்பு
இயற்கையின் கொடையான தாவரங்கள், விலங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் வியப்பூட்டுவதாகக் காணப்படுகின்றது. இவை ஒன்றிலொன்று தங்கியிருந்து தமக்கிடையே உதவி புரிந்து வருவதைக் காணலாம். உயிரினங்களில் மனிதனின் உடலமைப்பினை அவதானித்தால், சூழலை அவதானிப்பதற்கான ஐம்புலன்கள், புலன்களிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகளை மூளை வரை நகர்த்திச் செல்லும் நரம்புத்தொகுதி, பெறும் சமிக்ஞைகளை புரிந்து, அதற்கான தூண்டல்களை வழங்கும் மூளை எனத் மதிநுட்பமான கட்டமைப்புக்கள் அறிவியலாளர்களை வியக்க வைக்கின்றன.
இதனை அடிப்படையாக வைத்தே உணரிகள், கடத்திகள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்து செயற்படும் மத்திய செயற்பாட்டுத் தொகுதி என்பனவற்றினைச் செயற்கையாகக் கட்டமைப்பதற்கான தூண்டுதல்கள் ஏற்பட்டன. இவ்வாறாக இயற்கையை அவதானித்துப் புதிய கட்டமைப்புக்களை வடிவமைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, மனித மூளைக்கு நிகரான கணினி மத்திய செயற்பாட்டுத் தொகுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனிதனின் மூளை, உடலின் மத்திய செயற்பாட்டுத் தொகுதி காணப்படுகின்றது. இது, தனது நரம்புத் தொகுதி வலையமைப்பினால் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகவல்களைப் பெற்று, அத்தூண்டல்களுக்கான துலங்கலை ஒரு கணப்பொழுதில் கட்டளையிடுகின்றது. அக்கட்டளைத் தகவல்களும் நரம்புத் தொகுதி வழியே துலங்கல் காட்டப்படவேண்டிய அவயவங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
மூளைக்குத் தகவல்கள் சமிக்ஞை வடிவில் கடத்தப்படும் விதம், அச்சமிக்ஞை மூளையினால் அறியப்படும் பொறிமுறை, துலங்கலுக்கான கட்டளை உருவாகி அனுப்பப்படும் முறைமை என்பன அறிவியலாளர்களுக்கு இன்னமும் புரியாத புதிர்களாக காணப்படுகின்றன. எனினும், ஆய்வுகளில் சில, மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் செயற்படும் விதம் தொடர்பான வினாக்களுக்கு விடையளித்துள்ளன.
மனித மூளை எவ்வாறு பாரிய அளவிலான தகவல்களைத் துரிதமாகக் கையாளுகின்றதோ, அதனை ஒத்த வேகத்தில் தகவல்களைப் பெற்று, ஆய்ந்து, செயற்படுத்தும் கணினியின் மத்திய செயற்பாட்டுத்தொகுதி அமைக்கப்படவேண்டும் என்பது ஆய்வாளர்களின் அவாவாக இருந்து வந்தது. இந்நோக்கில் அமெரிக்காவின் Lawrence Livermore ஆய்வகமும் IBM நிறுவனமும் இணைந்து செயற்பட்டு, குறிப்பிட்ட மத்திய தொகுதிச் செயற்பாட்டிற்கான இலத்திரனியல் உள்ளடக்கத்தினை வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இலத்திரனியல் உள்ளடக்கம் IBM True North எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய செயற்பாட்டுத்தொகுதி, சுமார் 16 மில்லியன் நரம்புக்கலங்கள் கொண்ட மூளைக்கு நிகரான தொகுதியாக விளங்குவதுடன், 4 பில்லியன் கணத்தாக்கங்களைக் துரிதகதியில் கையாளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில், 5.4 மூவாயிகள் கடத்திகளால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கடத்திகள் வாயிலாக, சுமார் 256 மில்லியன் மின் கணத்தாக்குகள் ஊடாக தகவல்கள் பரிமாறப்படும் வகையில் தொகுதி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய செயற்பாட்டுத் தொகுதி வழியே ஒரு செக்கனிற்கு அண்ணளவாக 46 000 000 000 எண்ணிக்கை அளவிலான மின் கணத்தாக்குகள் செயற்படுத்தப்படும் வகையில் இதன் வேகம் அமைந்துள்ளது. இதன்போதான தொகுதியின் மின்சக்தி நுகர்வு 70 மில்லி யூல் (70 mJ) ) என்ற அளவிற்கு மிகக் குறைந்ததாக காணப்படுகின்றது.
தற்போது இணைய வழி ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. உலகின் எம்மூலையிலிருந்தும் இணைய வலையமைப்பு வழியே ஊடுருவி நிறுவனங்களின் பணிகளை முடக்கும் செயற்பாடுகள் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க வல்லது. குறிப்பாக , அணுமின் நிலையங்களின் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் இணைய வழி ஊடுருவல்களால் செயலிழந்தால், அதன் பாதிப்பு மிக அபாயகரமான அமையும். இதனை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள மத்திய செயற்பாட்டுத் தொகுதி உபயோகிக்கப்படவுள்ளது.
இவ்வகையில் அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பு முகாமைத்துவத்தின் பணிகளில் உதவுதல் மற்றும் இணைய வழி ஊடுருவல்களைத் தடுத்தல் போன்ற பணிகளுக்காக இம்மத்திய செயற்பாட்டுத் தொகுதி பயன்படுத்தப்படவுள்ளது.



