Breaking News

பலமான பந்து வீச்சால் ஐதராபாத் அணி வென்றது

ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:–

வீரர்களின் கூட்டு முயற்சியால் ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்து இருக்கிறோம். இந்த அணிக்கு கேப்டனாக இருந்த எனக்கு வீரர்கள் அமோக ஆதரவை அளித்தனர். 200 ரன்னுக்கு மேல் குவிப்போம் என்று நாங்கள் நினைத்தோம். அதன்படி நடந்தது. வீராட்கோலி மிகச்சிறந்த தலைவர். இந்த சீசன் அவருக்கு சாதனையாக அமைந்தது.

தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் எங்களது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வார்னரின் பங்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. அவர் 848 ரன்கள் குவித்து (17 ஆட்டம்) 2–வது இடத்தை பிடித்தார். இதில் 9 அரை சதம் அடங்கும்.

தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:–

நாங்கள் மிகவும் போராடி தான் தோற்றோம். 200 ரன்கள் வரை குவித்துவிட்டோம். 8 ரன்னில் தான் தோல்வி அடைந்தோம். நானும், டிவில்லியர்சும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நானும், டிவில்லியர்சும் களத்தில் நீடித்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம்.

ஐதராபாத் அணியின் வெற்றிக்கு பலமான பந்துவீச்சு தான் காரணம். அந்த அணிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஐதராபாத் அணி வெற்றிக்கு தகுதியான அணி தான்.

இந்த சீசனில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். ரசிகர்கள் ஆதரவு சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீராட்கோலி இந்த ஐ.பி.எல். போட்டியில் 973 ரன்கள் குவித்து முத்திரை பதித்து முதல் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.