Breaking News

தாய்லாந்து புத்தர் கோவிலில் புலிகள் !

தாய்லாந்தில் உள்ள காஞ்சனாபுரி என்ற இடத்தில் புத்தர் கோவில் உள்ளது. அங்குள்ள புத்த பிக்குகள் புலிகளை வளர்த்து வருகின்றனர். அவை வீட்டு செல்ல நாய்கள் போன்று மிக சாதாரணமாக சாதுவாக உலாவருகின்றன.

அவற்றைக் காண அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர். அவர்கள் பயம் எதுவுமின்றி புலிகளை தொட்டுப் பழகுகின்றனர். அவற்றுடன் செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் அவர்களை புலிகள் தாக்குவதில்லை. நண்பர்கள் போன்று பழகுகின்றன.

புத்தபிக்குகள் இங்கு புலிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வளர்ப்பதாகவும், அவற்றுக்கு போதை மருந்து வழங்கி வசீகரித்து வைத்து இருப்பதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கும் புலிகளை மீட்டு வனப்பகுதியில் உலாவ விட வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கைகள் விடப்பட்டன. அதை தொடர்ந்து பல முறை அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தும் புத்தபிக்குகள் தடுத்து விட்டனர்.

ஆனால் இந்த முறை கோர்ட்டு உத்தரவு பெற்று வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பயனாக தற்போது அங்கிருந்து 40 புலிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. அவற்றில் நேற்று முன்தினம் 7 புலிகளும், நேற்று 33 புலிகளும் அடங்கும்.

மேலும் 97 புலிகள் அங்குள்ளன. அவை விரைவில் மீட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 40 புலிகளும் தாய்லாந்தில் உள்ள வனவிலங்குகள் சரணலாயத்தில் விடப்பட்டுள்ளன.