மாட்டிறைச்சி உண்ணுவது கிரிமினல் குற்றமா?!
மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பசுவதையை தடுக்கும் வகையில் மாட்டிறைச்சி உண்ணுவதை தண்டனை மற்றும் அபராதத்துக்குரிய கிரிமினல் சட்டமாக இயற்றியுள்ளன. இதேபோன்றதொரு சட்டம் டெல்லி (விவசாய கால்நடைகள்) பராமரிப்பு சட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என சட்ட மாணவரான கவுரவ் ஜெயின் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
ஏற்கனவே, இதே வகையில் மகாராஷ்டிர மாநில அரசு அறுமுகப்படுத்திய சட்டத்துக்கு மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளதாகவும், இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய மனுதாரர், டெல்லி அரசின் (விவசாய கால்நடைகள்) பராமரிப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த சாராம்சத்தை நீக்க வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், டெல்லியை சேர்ந்த அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தின் ஒருபகுதியாகும். ’மாட்டிறைச்சி உண்பது கிரிமினல் குற்றம்’ என்ற சட்டமானது, எந்த மதத்தின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் மாநில அரசுகள் ஈடுபடுதல் ஆகாது என்னும் அரசியலமைப்பு சட்டத்தின் மையக்கருத்தையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, இந்த (விவசாய கால்நடைகள்) பராமரிப்பு சட்டத்திலும் இடம்பெற்றுள்ள இந்த அம்சத்தை நீக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி இருமனுக்களின் மீதும் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி சங்கிதா திங்ரா செஹ்கல் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது. பின்னர், இதுதொடர்பாக வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



