Breaking News

104 புதிய கிரகங்களில் 4-ல் உயிரினங்கள் வாழ்கின்றன

விண்வெளியில் 104 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நான்கில் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் நாஸா தெரிவித்துள்ளது. மனித அறிவுக்கு எட்டியவரை, அண்ட வெளியில் தற்போது பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

பூமியைப் போலவே அளவும், வெப்பநிலையும், பிற சூழல்களும் கொண்ட கிரகங்களைக் கண்டறிவதற்காக, அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் 'கெப்ளர்' என்ற விண்கலனை கடந்த 2009-ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தியது. 

சூரியனை மையமாகக் கொண்டு விண்வெளியில் வலம் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்த கெப்ளரின் ஆயுள் 3.5 ஆண்டுகளில் முடிவடைந்தது. எனினும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கருவிகளை மட்டும் கொண்டு ஆய்வைத் தொடர்கிறது நாஸா. 

இந்த இரண்டாம் கட்ட ஆய்வில், நட்சத்திரங்களை கிரகங்கள் கடக்கும்போது, நட்சத்திரத்தின் வெளிச்சத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு கிரகங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில், கெப்ளர் அனுப்பிய தகவல்களைக் கொண்டு சூரியக் குடும்பத்துக்கு வெளியே 197 புதிய கிரகங்கள் இருக்கலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, பூமியிலுள்ள தொலைநோக்கு மையங்கள் பலவற்றின் தகவல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், அந்த 197 பொருள்களில் 104 பொருள்கள் கிரகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் 'கே2-72' என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகளால் ஆனதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 இவற்றில் வெப்பம் குறைவாகவும் பூமியை ஒத்ததாகவும் இருப்பதால் அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.